ரகுல் ப்ரீத்:


தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். 2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கில்லி' படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான முதல் படம் 'தடையறத் தாக்க'.


அதை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சிவகார்த்திக்கேயன் நடித்த அயலான் படத்தில் ரகுல்ப்ரீத் நடித்திருந்தார். தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 உள்ளிட்டப் படங்களிலும் நடித்துள்ளார்.


தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடுகள்:


இந்த நிலையில், நடிகை ரகுல்ப்ரீத் சிங், பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானி ஆகியோருக்கு வரும் 21ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், இன்னும் மூன்று நாட்களில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. 


இந்த காதல் ஜோடிக்கு கோவா கடற்கரையை ஒட்டி மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மட்டும் தான் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். நாளை முதல் 21ஆம் தேதி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 


இதற்கான ஏற்பாடு மும்முரமாக நடைபெற்று வருகிறது.  21ஆம் தேதி நடைபெறவிருக்கும் திருமணத்திற்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து ரகுல் ப்ரீத் சிங், ஜாக்கி பாக்னானி மற்றும் இவர்களது குடும்பத்தினர் இன்று கோவாவிற்கு புறப்பட்டனர். 


பசுமை திருமணம்:


இதற்கிடையில், இவர்களது திருமணம் பசுமை திருமணமாக நடைபெறும் என்று தெரிகிறது. அதாவது, திருமணத்திற்கு பத்திரிக்கை  அடிக்காமல், டிஜிட்டல் பத்திரிகை அனைவருக்கும் அனுப்பப்படுகிறது. இதோடு இல்லாமல், திருமண நிகழ்வில் பட்டாசு வெடிக்காமல் திருமணத்தை கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது.


பிளாஸ்டிக் தவிர்ப்பு:


பசுமை திருமணம் நடத்துவதற்கு தனி குழு ஒன்றையும் இவர்கள் ஏற்பாடு செய்துள்ளதாக  கூறப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், இயற்கை சூழலே பிரமாண்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக, பசுமை திருமணங்கள் நடைபெறுகிறது. பசுமை திருமணத்தில் டிஜிட்டல் அழைப்பிதழ்களை தேர்வு செய்து காகித பயன்பாட்டை குறைக்கும்.  திருமண விருந்தில் பரிமாறப்படும் பொருட்களில் பிளாஸ்டிக் இடம் பெறுவதை தவிர்த்து, பீங்கான், மண் குவளை போன்றவற்றை பயன்படுத்தப்படும்.


பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கு, திருமணத்திற்கு வருகை தருபவர்களுக்கு மரக்கன்றுகள், பழங்களின் விதைகள், தாவரங்களின் விதைகள், காய்கறிகளின் விதைகள் வழங்கப்படும். மொத்தமாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் தான் 'பசுமை திருமண'த்தை பலரும் நடத்தி வருகின்றனர்.  அந்த வகையில் தான், 21ஆம் தேதி ரகுல் பீரித் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி ஆகியோருக்கு திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.