Hrithik Roshan Krrish 4: க்ரிஷ் 4 திரைப்படத்த்தின் மூலம் ரித்திக் ரோஷன் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார்.


க்ரிஷ் - 4 அறிவிப்பு:


மார்வெல் மற்றும் டிசி நிறுவனங்கள் சார்பில் வெளியாகும் சூப்பர் ஹீரோக்கள் திரைப்படம், இந்தியாவிலும் பெரும் கல்லா கட்டுகின்றன. இதனை முன்பை கணித்தே பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ரோஷன், கடந்த 2006ம் ஆண்டு தனது மகன் ரித்திக் ரோஷனை வைத்து “க்ரிஷ்” எனும் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். படம் பெரும் வெற்றி பெற்று வசூலையும் வாரிக்குவித்தது.  2003 ஆம் ஆண்டு வெளியான 'கோய்... மில் கயா' படத்தின் தொடர்ச்சியாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்து, இரண்டாவது பாகமாகவே க்ரிஷ் படத்தை வெளியிட்டார். அதைதொடர்ந்து, மூன்றாவது பாகமும் 2013ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்தது. இந்நிலையில் தான், க்ரிஷ் 4 தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.



இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரித்திக் ரோஷன்


க்ரிஷ் படத்தின் முந்தைய பாகங்களை தயாரித்து இயக்கிய ராகேஷ் ரோஷன், தனது சமூக வலைதள கணக்கில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “25 வருடங்களுக்கு முன்பு நான் உங்களை ஒரு நடிகராக அறிமுகப்படுத்தினேன், இன்று மீண்டும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு திரைப்பட தயாரிப்பாளர்களான ஆதி சோப்ராவும் நானும் எங்கள் மிகவும் லட்சிய திரைப்படமான #Krrish4 ஐ முன்னெடுத்துச் செல்ல உன்னை இயக்குநராக அறிமுகப்படுத்துகிறோம் . இந்த புதிய அவதாரத்தில் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்களுடன் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். க்ரிஷ் 4 படத்தை தான் இயக்க மாட்டேன் என அவர் ஏற்கனவே கூறி இருந்த நிலையில், தற்போது தனது மகனையே ராகேஷ் இயக்குனராக அறிவித்துள்ளார்.






கைமாறிய தயாரிப்பாளர்


முன்னதாக க்ரிஷ் 4 திரைப்படம் சித்தார்த் ஆனந்த் தயாரிப்பில் கரண் மல்ஹோத்ரா இயக்கத்தில் உருவாக இருந்தது. ஆனால், படத்தின் பட்ஜெட் சுமார் 700 கோடி வரை நீண்டதால், தயாரிப்பாளரும், இயக்குனரும் படத்தில் இருந்து வெளியேறினர். மார்வெல் படங்களின் தாக்கம் இந்திய ரசிகர்களிடையே நிலவுவதால், அதனுடன் ஒப்பீடு செய்து படம் வசூலில் சொதப்பலாம் என்ற அச்சம் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் தான், ஆதி சோப்ராவுடன் இணைந்து தானே படத்தை தயாரிக்க உள்ளதாக ராகேஷ் ரோஷன் அறிவித்துள்ளார்.


க்ரிஷ் 4 எப்போது வெளியாகும்?


க்ரிஷ் 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, அடுத்த ஆண்டு திரைக்கு வரலாம் என கூறப்படுகிறது. திரைக்கதை  இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில்,  ப்ரீ-ப்ரொடக்சன்  பணிகள் தற்போது நடந்து வருகின்றன. கடந்த 2013ம் ஆண்டு வெளியான க்ரிஷ் படத்தின் மூன்றாம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் கங்கனா ரணாவாத் ஆகியோர் இடம்பெற்று நடித்து இருந்தார். விவேக் ஒபராய் வில்லன் கதாபாத்திரம் ஏற்று இருந்தார். அந்த படத்தின் முடிவில் ரித்திக்கின் ரோகித் மெஹ்ரா கதாபாத்திரம் உயிரிழந்து இருக்கும். அதேநேரம், க்ரிஷ் மற்றும் பிரியா ஜோடிக்கு, சக்திகளுடன் குழந்தை பிறந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.