தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்டு, தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை இன்று காலை வெளியான நிலையில், அப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
மோஷன் போஸ்டரின் தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹூப்ளி நதிக்கரை ஓரம் இருக்கும் ஹவ்ரா ப்ரிட்ஜ் காண்பிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, ரஜினி அமர்ந்து வரும் இருசக்கர வாகனத்தின் நம்பர் ப்ளேட்டில் டபிள்யூ.பி என குறிப்பிடப்பட்டுள்ளதால், மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் கதைக்களம் கொண்டதாக படம் அமைந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, இந்திய சினிமாவிலும் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தர்பார் படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமானது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நடிகர் ரஜினிகாந்தும் டப்பிங் பேசி முடித்துவிட்டார். இந்த நிலையில், அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை விநாயகர் சதுர்த்தி தினமான இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்றும், படத்தின் மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து இப்போது மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. அண்ணாத்த படம் நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.