நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 51வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார். கமல் வாழ்த்தியுள்ளார். சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டில் அடுத்த விநாடி ஒளித்து வைத்திருக்கும் அதிசயங்கள் ஏராளம் என்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி இணைந்து தயாரிக்கும் படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.





மற்றொரு பக்கம், கமல் தனது வாழ்த்து ட்வீட்டில்  “சில வேலைகள்  சந்தோசத்தை தரும் ; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும்.@sonypicsfilmsin & @RKFI இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும்” எனக் கூறியுள்ளார். 


இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் இதுவரை சத்யராஜ், விக்ரம், மாதவன் ஆகியோர் மட்டுமே நடித்துள்ளனர். அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் அந்த நிறுவனம் தயாரிக்கும் நான்காவது நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. 






இந்த ஆண்டு சிவாவின் நடிப்பில் ஐந்து திரைப்படங்கள் தற்போது உறுதியாகியுள்ளன.சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டான்’. இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை 2022 ம் ஆண்டு , காதலர் தினமான பிப்ரவரி 14 அல்லது சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

அயலான் : சயின்ஸ் ஃபிக்ஸன் காமெடி கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். படத்தை ரவிக்குமார் இயக்க , ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சில கடன் பிரச்சனைகள் காரணமாக தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் படத்திற்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பிரச்சனைகள் முடிக்கப்பட்டு படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

சிங்கப்பாதை : அட்லியின் உதவி இயக்குநர் அசோக் இயக்கத்தில். அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். படத்திற்கு இமான் இசையமைக்கிறார். கேஜேஆர் ஸ்டூடியோஸ் படத்தை தயாரிக்கிறது. தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இந்த திரைப்படமும் 2022 வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.


பை - லிங்குவலில் சிவா :தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பைலிங்குவல் படம் ஒன்றில் நடிக்க போகிறாராம். இந்த படத்தின் ஷுட்டிங் ஜனவரி மாதம் துவங்கப்பட உள்ளதாம். படத்தின் பெயர் மற்றும் அடுத்தடுத்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்