தந்தி டிவி மற்றும் தினமலர் நாளிதழில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளரான ரங்கராஜ் பாண்டே தற்போது தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்; அவரின் தந்தை ரகுநாதாசார்யா என்ற ராம்சிங்ஹாசன் பாண்டே; இவர் நேற்று இரவு 9:45 மணியளவில் காலமானார். அவரின் வயது 95. இந்த தகவலை ரங்கராஜ் பாண்டே தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் தெரிவித்தார். அவரின் தந்தையின் இறுதி சடங்குகள் இன்று சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வைகுண்ட ஏகதேசியான நேற்று அவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரங்கராஜ் பாண்டேவின் தந்தையின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று பாண்டே மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, அவரின் தந்தையின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ரங்கராஜ் பாண்டே, அவரின் குடும்பத்தாரை ரஜினிகாந்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். பாண்டேவின் தந்தையின் இறப்பிற்கு காரணம் பற்றி ரஜினிகாந்த் கேட்டறிந்தார்; அவரிடம், தந்தை இது வரையில் எந்த ஒரு மருத்துவ சிகிச்சையோ அல்லது ஊசி மாத்திரை என எதுவுமே எடுத்து கொண்டது கிடையாது என்றும் இது இயற்கையான மரணம் என ரங்கராஜ் பாண்டே கூறினார். பின்னர் அனைவரிடமும் இருந்து விடைபெற்று கொண்டார் ரஜினிகாந்த். அவரை காண அங்கும் ஏராளமான ரசிகர்கள் திரளாக கூடி இருந்தனர்.
பத்திரிகை துறையில் மிகவும் பிரபலமாக இருந்த ரங்கராஜ் பாண்டே திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர். அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். அப்படத்தில் நடிகர் அஜித்துக்கு எதிராக இவர் பேசிய சில விவாதங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதை தெடர்ந்து க/பெ. ரணசிங்கம் திரைப்படத்திலும் கலெக்டராக நடித்திருந்தார் ரங்கராஜ் பாண்டே.