Padayappa Rerelease Collection: ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி படையப்பா திரைப்படம் கடந்த 12ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
படையப்பா ரீரிலீஸ்:
ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படையப்பா திரைப்படம், கடந்த 1999ம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டி எல்லாம் ஹிட் அடித்தது. சூப்பர் ஸ்டாரின் மிக முக்கிய வெற்றிப்படங்களில் இது தவிர்க்க முடியாத படமாக அமைந்தது. இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 12ம் தேதி படையப்பா திரைப்படம் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மறுவெளியீடு செய்யப்பட்டது. இந்த படத்திற்கான விளம்பரத்திற்காக ரஜினி பிரத்யேகமாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.
திரையரங்குகள் விழாக்கோலம்:
படையப்பா திரைப்படம் மறுவெளியீட்டால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டது. ரஜினி குடும்பத்தினர் மட்டுமின்றி சிவாகர்த்திகேயன் உள்ளிட்ட, திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் திரையரங்குகளுக்கு சென்று படையப்பா படத்தை கண்டு, தங்களது சந்தோஷத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால், படம் வசூலிலும் பெரிய அளவில் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
வசூலில் முடங்கிய படையப்பா...
முதல் இரண்டு நாட்கள் படையப்பா திரைப்படம் வெளியான திரையரங்குகள் ஹவுஸ்-ஃபுல் ஆகவே காட்சியளித்தன. முன்பதிவிலும் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால், படையப்பா படத்தின் வசூல் என்பது அடுத்தடுத்த நாட்களில் கடுமையாக சரிந்தது. தொடர்ந்து, அவதார் போன்ற படங்களின் வருகையும், பல திரைகளில் இருந்து படையப்பா படத்தை அகற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோக இந்த வாரம், விக்ரம் பிரபுவின் சிறை, அருண் விஜயின் ரெட்ட தல போன்ற படங்களும் வெளியாக உள்ளன. இதனால், படையப்பா படத்தின் வசூல் அதிகளவில் உயர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
கில்லியிடம் வீழ்ந்த படையப்பா?
படையப்பா திரைப்படம் முதல் சுமார் 4 கோடி வரை வசூலித்ததாம். அதனை தொடர்ந்து முதல் வார இறுதியில் 16 கோடி ரூபாய் வரையிலும், 10 நாட்கள் முடிவில் 18 முதல் 19 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே 11 முதல் 13.25 கோடி ரூபாய் வரையிலும், வெளிநாடுகளில் இருந்து 2.75 கோடி ரூபாய் வரையிலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து 1.5 கோடி ரூபாய் வரையிலும் வசூலித்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கடந்த கோடை காலத்தில் வெளியான படையப்பா திரைப்படம் 30 முதல் 33.25 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. அதவாது கில்லி படத்தின் ரீரிலீஸின் வசூலை முந்த படையப்பா படத்திற்கு இன்னும், கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. அந்த தொகையை படையப்பா படம் ஈட்டுமா? என்பது சந்தேகமே என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கில்லி சாதித்தது எப்படி?
கடந்த கோடை காலத்தில் கில்லி திரைப்படம் வெளியான போது பெரிய படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இதனால், ஒரு மாத காலம் வரை இந்த படம் திரையிடப்பட்டது. அதுபோக கில்லி விஜயின் கல்ட் க்ளாசிக் திரைப்படம் என்பதால், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுவான ரசிகர்களும் குடும்பத்துடன் திரையரங்குகளில் குவிந்து படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதன் மூலம், ரீரிலீஸ் செய்யப்பட்டு அதிக வசூல் செய்த தமிழ்படங்களில், கில்லி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. படையப்பா திரைப்படம் தற்போது வரை இரண்டாவது இடத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது.