திருப்பரங்குன்றம் போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், பொதுமக்கள் உட்பட 62 பேர் மீது வழக்கு.
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற போராட்டம்
மதுரை, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் கொடியேற்ற இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளித்ததை கண்டித்து, மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெரு குடியிருப்பு வாசிகள் நேற்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குழந்தைகள் ஆண்கள் என 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு திருநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். நேற்று மாலை 6 மணியை கடந்தும் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் விடுவிக்காததால் அவர்களைப் பார்க்க வந்த பாஜகவினர் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் - மதுரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் இரவு 11 மணிக்கு மேல் அனைவரையும் விடுவித்தனர்.
62 பேர் மீது வழக்குப் பதிவு
இந்த நிலையில் அனுமதியின்றி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறும் ஏற்படும் விதமாக போராட்டம் நடத்தியதாக, பாஜக நிர்வாகிகள் சிவலிங்கம், மாரி சக்கரவர்த்தி உட்பட 45 பேர் மீது திருநகர் காவல் நிலையத்திலும், திருப்பரங்குன்றம் மலை மேல் இஸ்லாமியர்களை கொடி ஏற்ற அனுமதி அளித்ததை கண்டித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பழனியாண்டவர் கோவில் தெரு குடியிருப்பு வாசிகள் 17 பேர் மீது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.