நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் பெங்களூரு சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை தமன்னா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மோகன்லால், ஜாக்கி ஷெராப், நடிகை ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தரமணி புகழ் வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 




கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கிய ஜெயிலர் படப்பிடிப்பு 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக்கை படக்குழு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று ஜெயிலர் படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியானது. இதில் ரஜினியின் கேரக்டரான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றம் அறிமுகம் செய்யப்பட்டது.


இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் விமானத்தில் பெங்களூரு சென்றார்.


விமான ஊழியர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவில் பெங்களூருவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்திய சிவராத்திரி விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, மூத்த மகள் ஐஸ்வர்யா  ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டானது. அதற்கு முன்னதாக மாலை தனது அண்ணன் சத்தியநாராயணனுடன் பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி மையத்திற்கு வழிபாடு நடத்தினார். 


இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் ரஜினி தனது அண்ணன் சத்யநாராயணனுடன் மாலையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. தனது அண்ணனின் 80வது பிறந்தநாள் விழாவில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.