தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படும்  நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்தநாள்  வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஜினியின் பிறந்த நாள் பரிசாக, அவர் நடிப்பில் வெளியான பாபா படம் ரீ ரிலிஸ் செய்யப்பட்டது.


அத்துடன் ஜெயிலர் படத்தில் அவர் நடித்து ஏற்று இருக்கும் கதாபாத்திரத்திரமான முத்துவேல் பாண்டியன் தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவும் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்தும் அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும்  நேற்று இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றனர். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள டி.எஸ் ஆர் விருந்தினர் அறையில் அவர்கள்  தங்க வைக்கப்பட்டனர். இருவரும் அதிகாலை சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதன்பின்னர் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


 


                     


இதனையடுத்து கோயிலில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு ஆமாம். நான் வாழ்த்துகளை தெரிவித்திருந்தேன் என கூறினார். மேலும்  6 வருடங்களுக்குப் பின் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தது எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, திவ்ய அனுபவம் என பதிலளித்தார். திருப்பதியில் இருந்த ரஜினி வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 


 


                   


இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள பிரபல அமீன் பீர் பெரிய தர்காவிற்கு சென்றுள்ளார். இவருடன் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானும் வந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் தர்கா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.