கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பாதிப்பால் வித்தியாசாகரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. அதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் மற்றும் இதயம் ஏற்கெனவே செயலிழந்து விட்டது. எனவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல் போகவே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை.
எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆவார். மீனாவுக்கும் இவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். வித்தியாசாகரின் உடல் இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
48 வயதாகும் வித்யாசாகரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை மீனா கணவர் வித்யாசாகரின் மரணத்திற்கு பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், நடிகை மீனாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முதலில் போன் செய்து ஆறுதல் தெரிவித்தார். போனை தொடர்ந்து சைதாப்பேட்டையில் உள்ள நடிகை மீனாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடிகை மீனா வீட்டிற்கு நடிகை ரம்பா முதல் ஆளாய் வந்தார். அவரை தொடர்ந்து நடன இயக்குநர் கலா மாஸ்டர், குணசித்திர நடிகை லட்சுமி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று துக்கத்தில் பங்கெடுத்து வந்தனர். மேலும், பலர் கொரோனா பரவல் காரணமாக இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக நடிகை மீனாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி காந்த் - நடிகை மீனா சினிமா பயணம்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் எங்கேயோ கேட்ட குரல் மற்றும் 1984ல் வெளியான அன்புள்ள ரஜினி காந்த் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் மீனா. ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க..” என்ற மீனாவின் குரல் காலங்கள் கடந்தும் இன்றும் ஒலித்துக்கொண்டு இருக்கும் அளவிற்கு அனைவரின் கவனத்தையும் பெற்றார் மீனா.
தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்துடன் முத்து, எஜமான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். இறுதியாக கடந்த ஆண்டு வெளிவந்த ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து தமிழில் மீண்டும் ரீ- எண்ட்ரி கொடுத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்