தனது மகள் சௌந்தர்யாவின் குழந்தையின் பெயர் சூட்டு விழாவுக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து கோவை வந்தார். நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா -  விசாகன் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.


இந்நிலையில் சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் சொந்த ஊரான கோவை, சூலூரில், இவர்களது குழந்தையின் மொட்டை, காதணி மற்றும் பெயர் சூட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் உள்ளிட்ட ரஜினிகாந்தின் குடும்பத்தார் கலந்துகொண்ட ஃபோட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின.




 


நடிகர் ரஜினிகாந்தை எங்கே ஆளைக் காணோம் என ரசிகர்கள் தேடி வந்த நிலையில்,  தற்போது நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் பங்கேற்பதற்காக கோயம்புத்தூர் வருகை தந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


சென்னை  விமான நிலையத்திலிருந்து கோவை விமான நிலையத்துக்கு தன் மனைவி லதாவுடன்  ரஜினிகாந்த் வருகை தந்தார்.


மேலும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சிறைக்குச் சென்று நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. அதற்காக அவர் மனு கொடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.


இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களின் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், இன்றைய குடும்ப நிகழ்ச்சி காரணமாக கோவை வந்துள்ளதால் தன்னால் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.


 






தங்கள் இருவரது தந்தைகளின் பெயர்களையும் சேர்த்து தங்கள் குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என சௌந்தர்யா - விசாகன் தம்பதி பெயர் சூட்டியுள்ளனர்.


முன்னதாக சென்னையில் ரஜினிகாந்த் விழாவுக்காக புறப்படுகையில், லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. படம் எப்படி இருக்கும் எனக் கேட்கப்பட்ட நிலையில், வெயிட் பண்ணி பாருங்க, படம் நல்லா வரும்” என ரஜினிகாந்த் பதிலளித்தார்.


ரஜினிகாந்த், லோகேஷ் இணைந்துள்ள தலைவர் 171 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாள்களுக்கு முன்னதாக வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் உடன் தலைவர் 170 படத்தில் இணைந்துள்ள நிலையில், அதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாகவும், தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


சன் பிச்சர்ஸ் இப்பத்தைத் தயாரிக்கும் நிலையில், ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இப்படமும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுககிறது.