Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத்தொகை பிடித்தம்; புகார் எண் அறிவிப்பு- வங்கிகளுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை

Kalaignar Magalir Urimai Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொகையை பயனாளர்களிடம் இருந்து சில வங்கிகள் பிடித்தம் செய்து வரும் நிலையில், இதுகுறித்து புகார் எண் 1100 அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொகையை பயனாளர்களிடம் இருந்து சில வங்கிகள் பிடித்தம் செய்து வரும் நிலையில், இதுகுறித்து புகார் எண் 1100 அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Continues below advertisement

இதுகுறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

’’பேரறிஞர்‌ அண்ணாவின்‌ பிறந்த நாளான செப்டம்பர்‌ 15-ம்‌ தேதி தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில்‌ 1.065 கோடி மகளிருக்கு, கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டத்தில்‌ மகளிர்‌ உரிமை தொகை வழங்கும்‌ நிகழ்வை முதலமைச்சர்‌ தொடங்கி வைத்தார்‌. திட்டத்‌ தொடக்கத்தின்‌ முதல்‌ நாளே ஒரு கோடிக்கும்‌
மேற்பட்ட மகளிரின்‌ வங்கிக்‌ கணக்கில்‌ உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது ஒரு மகத்தான சாதனை நிகழ்வாகும்‌. இது குறித்து நாடே பாராட்டுகிறது. 

வரும் புகார்கள்

தமிழ்நாட்டின்‌ இத்திட்டத்தைப்‌ பற்றி மற்ற மாநிலங்களும்‌ வியந்து பாராட்டி வருகின்றன. இந்த நிலையில்‌ ஆங்காங்கே சில குறைகள்‌ அரசின்‌ கவனத்திற்கு வந்துள்ளன. மகளிரின்‌ வங்கிக் கணக்கில்‌ வாவு வைக்கப்பட்ட உரிமைத் தொகையை வங்கிக்கான சேவை கட்டணம்‌, ஏற்கெனவே வாங்கிய கடன்‌ ஆகியவற்றுக்கு சில வங்கிகள்‌ நேர்‌ செய்து கொள்வதாக புகார்கள்‌ வரப்பெற்றுள்ளன. இது மிகவும்‌ வருந்தத்தக்க நிகழ்வாகும்‌.

வங்கிகள்‌ மேல்‌ நடவடிக்கை  

இதுகுறித்து மாநில வங்கிகள்‌ குழுமத்தின்‌ கூட்டத்தில்‌ தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ வழங்கப்படும்‌ உரிமைத்‌ தொகையை வங்கிகள்‌ பிடித்தம்‌ செய்யக்‌ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும்‌ சில வங்கிகளில்‌ இந்த அறிவுறுத்தல்‌ பின்பற்றப்படவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு அரசு வழங்கும்‌ மகளிர்‌ உரிமைத்‌ தொகையை வங்கிகள்‌ தங்களது நிர்வாக செலவினங்களுக்கு நேர்‌ செய்யக்கூடாது என்று மாநில அரசுக்கும்‌ வங்கிகளுக்கும்‌ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்‌ செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தங்களை மீறும்‌ வங்கிகளின்‌ வங்கிகளின்‌ பரிவர்த்தனைகள்‌ வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌.

மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம்‌

தமிழ்நாடு அரசு மகளிரின்‌ நல்வாழ்வுக்காக வழங்கும்‌ மகளிர்‌ உரிமைத்‌ தொகையை, வங்கிகள்‌ தங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம்‌ செய்யக்‌ கூடாது என்பது குறித்து மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம்‌ எழுதப்படும்‌. மகளிர்‌ உரிமைத்‌ தொகையில்‌ பிடித்தம்‌ செய்யப்பட்டிருந்தால்‌ அது குறித்து புகார்‌
அளிப்பதற்கு முதல்வரின்‌ முகவரி உதவி மைய தொலைபேசி எண்‌ 1100- ஐ அழைத்துப் புகார்‌ அளிக்கலாம்‌. மகளிர்‌ அளிக்கும் புகார்கள்‌ குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‌’’.

இவ்வாறு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, தகுதியுள்ள மகளிருக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கப் பெறுவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement