வேட்டையன் ஆடியோ லாஞ்ச்


ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்திருக்கிறார். வேட்டையன் திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் வேட்டையன் படம் உருவான விதம் குறித்து பேசினார். 


ரஜினிகிட்ட இருந்து கால் வரல


“ இன்று நான் மேடையில் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் சூர்யா சார் தான். எந்த நல்ல படம் வந்தாலும் ரஜினி சார் அந்த படத்தை பார்த்து ஃபோன் செய்து பேசுவார். நான் புது சட்டை எல்லாம் வாங்கி வைத்து அவரை சந்திக்க தயாராக இருந்தேன். ஆனால் அவரிடம் இருந்து ஃபோன் வரவில்லை. இரண்டு வாரம் கழித்து அவர் மகள் செளதர்யாவிடம் இருந்து எனக்கு ஃபோன் வந்தது. அவர் ஜெய்பீ படத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துவிட்டு ரஜினிக்கு கதை கேட்டார். இது அப்பாவுக்கு தெரியுமா என்று நான் திருப்பிக்கேட்டேன். இரண்டு வாரம் யோசித்து இரண்டு கதை சொன்னேன். ஒன்று ஜாலியான ஒரு கதைக்களம் மற்றொன்று வேட்டையன். செளந்தர்யா வேட்டையன் கதையை தான் செலக்ட் செய்தார். ரஜினி சாருக்கும் இந்த லைன் பிடித்திருந்தது மேலும் டெவலவ் செய்ய சொன்னார். “ என்று ஞானவேல் பேசினார்.


தொண்டர்களுக்கு சரியான தலைவன்


ரஜினி பற்றி பேசும்போது. ‘ ரஜினி சார் நடித்த படையப்பா படத்தில் ஊஞ்சல் காட்சி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்காக நான் எந்த காட்சியை எழுதினாலும் அது ஒரு மாஸ் காட்சியாக மாறிவிடுகிறது. ரஜினி இருப்பதால் தான் அப்படி நடக்கிறது. நீங்கள் எந்த மாஸ் காட்சியும் எழுதவில்லை என்றாலும் அவர் அதை மாஸாக மாற்றிவிடுவார். அதனால் கதை விட்டு விலகாமல் இருக்க என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன் .எல்லா தலைவர்களுக்கும்  சரியான தொண்டர்கள் கிடைப்பார்கள். ஆனால் எல்லா தொண்டர்களுக்கும் சரியான தலைவன் கிடைப்பதில்லை. அப்படி சரியான தலைவன் கிடைத்திருப்பது தான் ரஜினிகாந்த்” என அவர் பேசினார்