பரம் வீர் சக்ரா (PVC) விருது பெற்றவர்களின் பெயரிடப்பட்ட அந்தமான் - நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள 21 தீவுகளுக்கு முதல் திறந்தவெளி நீச்சல் பயணம் மேற்கொண்ட வீரர்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று புதுதில்லியில் வரவேற்று கௌரவித்தார்.
21 அந்தமான் தீவுகள்:
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை நினைவுகூரும் பராக்ரம தினமான 2023 ஜனவரி 23 அன்று பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயரை 21 பெரிய தீவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார். பெயர் மாற்றத்தின் முதல் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், முப்படை அந்தமான் - நிக்கோபார் கட்டளையகம் 'எக்ஸ்பெடிஷன் பரம் வீர்' என்ற நீச்சல் பயணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை ஆகியவற்றின் பணியாளர்கள் 21 தீவுகளுக்கும் நீச்சல் மேற்கொண்டனர். புகழ்பெற்ற திறந்த நீர் நீச்சல் வீரரும், டென்சிங் நார்வே தேசிய சாகச விருது பெற்ற விங் கமாண்டருமான பரம்வீர் சிங் தலைமையில் 11 பேர் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர்.
2024 மார்ச் 22 அன்று உலக நீர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து பயணம் தொடங்கப்பட்டது. இந்தக் குழு 21 தீவுகளுக்கும் 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை ஐந்து மாதங்களில் நீந்திச் சென்றது. இந்த பயணம் 2024 ஆகஸ்ட் 15, அன்று 78வது சுதந்திர தினத்தில் முடிவடைந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர தீபாவில் இருந்து ஸ்ரீ விஜயபுரம் வரை ஆயுதப்படை மற்றும் கடலோர காவல்படையைச் சேர்ந்த 78 வீரர்கள் இறுதி நீச்சல் பயிற்சியை மேற்கொண்டனர்.
மகத்தான சாதனை:
பயணத்தின் போது, நீச்சல் வீரர்கள் பல சவால்களை எதிர்கொண்டனர், இதில் கடுமையான சோர்வு, தீவிர நீரிழப்பு, வெயில் மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் ஆகியவை அடங்கும். இப்பகுதியில் கொடிய கடல்வாழ் உயிரினங்களும் குறுக்கிட்டன. எனினும், முழு பயணமும் ஒரு அசம்பாவிதம் கூட இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது, பங்கேற்பாளர்களில் பெரும்பாலோர் முதல் முறையாக திறந்த நீர் கடல் நீச்சலை மேற்கொண்டனர் என்பது ஒரு மகத்தான சாதனை.
புதுதில்லியில் வீரர்களை வரவேற்று பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தமது உரையில், கடலில் பல்வேறு சவால்களை சமாளித்து பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள குழுவினரின் தைரியத்தையும், திறன்களையும் பாராட்டினார். ஆயுதப்படை வீரர்கள் தொடர்ந்து நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்றும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக இருப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.