லியோ திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். லியோ படம் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் லோகேஷ் கனகராஜ். அப்போது தான் அடுத்ததாக இயக்க இருக்கும் ரஜினிகாந்தின் தலைவர் 171 படம் தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
தலைவர் 171
லியோ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படம் தலைவர் 171. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நடிக்க சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தலைவர் 171 படம் குறித்து சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பேசியபோது
“ எல்.சி.யூவை விட்டு வெளியே வந்து என்னுடைய ஸ்டைலில் ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருந்தது. தலைவர் 171இன் கதை மிகக் கச்சிதமாக ரஜினிகாந்துக்கு பொருந்தி இருக்கிறது. இந்தப் படத்தை இயக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். அதே நேரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இந்தப் படத்தில் நடிப்பதற்கு மிக உற்சாகமாக காத்திருக்கிறார்.
நான் அவரிடம் கதை சொல்லி முடித்ததும் அவர் எழுந்து வந்து என்னை கட்டிபிடித்துக் கொண்டார். வழக்கம் போல் அவரது ஸ்டைலில் ‘கலக்கிட்ட கண்ணா’ என்று பாராட்டினார். அவரது கண்களில் இருந்த சந்தோஷத்தை என்னால் பார்க்க முடிந்தது” என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
தற்போது லியோ படத்திற்காக இன்று செய்தியாளர்களை சந்தித்தார் லோகேஷ் கனகராஜ். லியோ படம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர். தலைவர் 171 பற்றி பேசினார். பொதுவாகவே லோக்கியின் படங்கள் போதைப் பொருட்களை மையமாக வைத்து இருப்பதால் தலைவர் 171 படமும் அதே மாதிரி இருக்குமா என்று அவரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு “ தலைவர் 171 தன்னுடைய வழக்கமான கதைகளை விட்டு வித்தியாசமானதாக இருக்கும் என்றும் மிக சீரியஸான ஒரு படமாக இந்த படம் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிற நடிகர்கள்
இந்தப் படத்தின் வேலைகள் தொடங்கியதும் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என லோகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் நடிகர்கள் பற்றி நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். தலைவர் 171 படத்துக்காக முதன்முறையாக மலையாளத் திரையுலகின் திரைக்கதை எழுத்தாளர்களுடன் சேர்ந்து பணியாற்ற இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.
அடுத்த ஆண்டு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கலாம்