சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170 ஆவது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் மற்றும் நானி நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது படத்தில்  நடிக்க மறுத்துவிட்டிருக்கிறார் இந்த மூவரில் ஒருவர். ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும்  வாய்ப்பை மறுத்த அந்த நடிகர் யார் என்று தெரியுமா?


”இனி முடிச்சுட்டுத்தான் திரும்பி வருவேன்”


ஜெயிலர் படத்தில் வருவதுபோல், இதோட நிறுத்திக்கலாமே என்று அவரிடம் கேட்பவர்களுக்கு “ரொம்ப தூரம் போயிட்டேன் இனி முடிச்சுட்டு தான் திரும்பி வருவேன்” என்று ரஜினி சொல்வது போல் . தனது சினிமா கரியரை ரஜினி எப்போது நிறுத்திக்கொள்ளப் போகிறார் என்கிற கேள்விகள் ஒருபக்கம் இருக்க ரஜினி என்னவோ அடுத்த அடுத்தப் படங்களுக்கு தயாராகியபடியே இருக்கிறார். ஜெயிலர் படத்தின் அலப்பறையான வெற்றியைத் தொடர்ந்து த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் பிற நடிகர்களின் பெயர்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு ரஜினியின் படத்திற்கு சம்பவம் பெரிதாகிக் கொண்டேதான் இருக்கிறது.


யார் யார் நடிக்கிறார்கள்?


கோலிவுட்டில் எப்படி ரஜினியோ அதே மாதிரி பாலிவுட்டில் போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சன். இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் பார்க்கும் அனுபவத்தை கற்பனை செய்துபாருங்கள். ஞானவேல் இயக்கும் படத்தில் முதல் இணைப்பாக வந்து சேர்ந்தவர் பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன்.


இவரைத் தொடர்ந்து நடிகை மஞ்சு வாரியர் மற்றும் நான் ஈ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் நானி இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ரஜினிகாந்தின் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த வாய்ப்பை அவர் மறுத்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல்கள் இணையதளத்தில் பரவி வருகின்றன.


வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் ஹீரோவாக நடித்துவரும் தன்னால் வில்லனாக நடிக்க முடியாது என்று நானி இந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது நானி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.


ஜெயிலர்


 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகி இதுவரை ரூ.400 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது ஜெயிலர் திரைப்படம். தமிழ் சினிமாவின் வரலாற்றில் அதிக வசூல் ஈட்டியத் திரைப்படங்களின் வரிசையில் இணைந்துள்ளது ஜெயிலர் திரைப்படம்.