நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினி - நெல்சன் காம்போ
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த் உடன் கூட்டணி வைத்துள்ள திரைப்படம் ஜெயிலர்.
2021ஆம் ஆண்டு நடித்த அண்ணாத்த படத்தை அடுத்து கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படமாக இந்தப் படம் வெளியாகிறது. சன் பிச்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிலையில் அனிருத் இந்த்ப் படத்துக்கு இசையமைக்கிறார்.
நட்சத்திரப் பட்டாளம்
தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், ரஜினி அல்லாது மலையாள உச்ச நட்சத்திரம் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் பிரபலம் ஷாக்கி ஷெராஃப் என பல மொழி ஸ்டார்களும் நடித்துள்ளனர்.
யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக இந்தப் படம் தயாராகியுள்ளது.
இறுதிக்கட்ட ஷூட்டிங்
இந்தப் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல்கள் கடந்த சில நாள்களாக இணையத்தில் வெளியாகி வந்தன. தொடர்ந்து இன்று மாலை பட வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இன்று அதன்படி படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.
ஒத்திப்போன ரிலீஸ் தேதி
முன்னதாக இந்த ஆண்டு கோடை ஸ்பெஷலாக ஜெயிலர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் காரணமாக ஜெயிலர் ரிலீஸ் ஒத்திப்போனது.
இதனையடுத்து தீபாவளி ரிலீசாக படம் வெளியாகலாம் அல்லது சுதந்திர தின விடுமுறை நாள்களைக் குறிவைத்து படம் வெளியாகலாம் என்றும் முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. அதன்படி சுதந்திர தின விடுமுறையைக் குறிவைத்து தற்போது ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது.
முன்னதாக ஜெயிலர் பட வெளியீட்டை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் முன்கூட்டியே வெளியாகலாம் என அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Leo Shooting Spot : வேகமெடுக்கும் லியோ ஷூட்டிங்... விஜய் - த்ரிஷா டூயட்டுக்கு பிரம்மாண்ட செட்... விரைவில் சென்னை வரும் சஞ்சய் தத்!