Vettaiyan Collection Day 1: ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் திரைப்படம், இந்தியாவில் முதல் நாளில் சுமார் 30 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வேட்டையன் ரிலீஸ்
ரஜினிகாந்த் நடிப்பில், த. செ. ஞானவேல் இயகத்தில் உருவான திரைப்படம் வேட்டையன். லைகா தயாரிப்பில், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் என பெரும் நட்சத்திர பட்டாளமே, நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வேட்டையன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படம் என்பதால், திரையரங்குகள் நேற்று விழாக்கோலம் பூண்டன. போலி என்கவுன்டர் மற்றும் கல்வி வியாபார பொருளாக்கபப்டுவதை மையப்படுத்தி வேட்டையன் திரைப்படம் உருவாகியுள்ளது. ரஜினிய்ன் மாஸ் மசாலா, த. செ. ஞானவேலின் சமூக கருத்து கலந்த படமாக வேட்டையன் திரைக்கு வந்துள்ளது.
வேட்டையன் முதல் நாள் வசூல்
இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. சாக்னில்க் இணையதளத்தின் தகவல்களின்படி, இந்தியா முழுவதும் வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் சுமார் 30 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இதில் தமிழ் வெர்ஷனின் ரூ.26.15 கோடியும், தெலுங்கு வெர்ஷனின் ரூ.3.2 கோடியும், இந்தியில் ரூ.60 லட்சமும் மற்றும் கன்னட வெர்ஷன்ல் ரூ.5 லட்சமும் அடங்கும். இந்தியாவில் வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் சர்வ சாதாரணமாக 40 கோடி ரூபாயை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நிறைவேறவில்லை. அதேநேரம், சர்வதேச வசூல் தொடர்பான முழுமையான தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
எகிறப்போகும் வசூல்:
விடுமுறை அல்லாத நாள் மற்றும் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு புறப்படும் முனைப்பில் இருந்ததால், வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என கூறப்படுகிறது. ஆனால், இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால், படத்தின் வசூல் வேட்டை சூடுபிடிக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு நிலவரங்களும் இதையே பறைசாற்றுகின்றன.
தி கோட் பட முதல் நாளை வசூலை மிஞ்சியதா?
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் தி கோட். இந்தியாவில் இப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 45 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில், ரஜினியின் வேட்டையன் திரைப்படம் சுமார் 15 கோடி வரை குறைவாகவே முதல் நாளில் வசூல் செய்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், வேட்டையன் திரைப்படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லாததே படத்தின் வசூல் குறைய காரணம் என கூறப்படுகிறது.