சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “நான் முதல் முறை ஹுக்கும் பாடல் வரிகள் பார்த்தபோது தாறுமாறாக இருந்தது. அப்போது ஒன்றே ஒன்று சொன்னேன். சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை மட்டும் அதிலிருந்து எடுக்க சொன்னேன்.
சூப்பர் ஸ்டார் பட்டம் என்னைக்குமே தொல்லைதான். நான் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நீக்க நீண்ட காலத்திற்கு முன்பே கேட்டேன். அப்போது சிலர் ரஜினி பயந்துவிட்டதாக கூறினார்கள். நான் இரண்டு பேருக்கு மட்டுமே பயப்படுகிறேன்.
ஒன்று கடவுளுக்கு. மற்றொன்று நல்ல மனிதர்களுக்கு. நல்லவங்களோட சாபம் எப்போதும் நம்மை காயப்படுத்தும். நல்லவர்களை நாம் புண்படுத்தக் கூடாது. நல்லவர்களுக்கு பயப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு இல்லை, இந்தியா இல்லை, உலக அளவில் கொடி கட்டி பறப்பது சூப்பர் ஸ்டார் பட்டம். உள்ளூர் நடிகர் முதல் உலக நடிகர்கள் வரை சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலை காப்பி அடிக்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி திரைவாழ்வில் உச்சத்தில் நிற்பவர் என்றால் அது மிகையல்ல.
ஸ்டைல் மட்டுமா? அவரின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கூட போட்டா போட்டிதான்... உலக நாயகன் ரசிகர்களும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் ஒரு காலத்தில் மோதிக்கொண்டது உண்டு. அதேபோல் அடுத்த ஜெனரேஷனான விஜய் - அஜித் ரசிகர்களுக்குள்ளும் மோதல் போக்கு நிலவியது உண்மை. அதேநேரம் அதற்கும் அடுத்த ஜெனரேஷனான சிம்பு - தனுஷ் ரசிகர்களும் மோதிக்கொண்டர். இவர்கள் எல்லாம் யார் தலைவன் பெரிய ஆளு என்பதிலும் யார் படம் நல்லா இருக்கும் என்பதிலுமே மோதிக்கொண்டனர்.
ஆனால் ஒருவருக்கு அடைமொழியாக கொடுக்கப்பட்ட பட்டம் எங்களுக்குதான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி தினம் தினம் மோதிக்கொள்ளும் ரசிகர்களின் போக்கு இந்த ரஜினிகாந்த் என்ற ஒரு மேஜிக் மேனுக்கே வாய்க்கும். ஆம்! ஒரு காலத்தில் விஜய்யும் அஜித்தும் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று மோதிக்கொண்டிருந்தனர். இதை இருவருமே ஒப்புக்கொண்டும் உள்ளனர். தற்போது விஜயின் ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு சிலர் ரஜினிகாந்துக்கே டஃப் கொடுக்கும் விதமாக சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாக அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என வசனங்களை வாரித் தெளித்து வருகின்றனர். இதற்கு ரஜினிகாந்த் ரசிகர்களும் என்றைக்குமே நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் 1972 ஆம் ஆண்டு பைரவி படத்தின் போது ரஜினிகாந்துக்கு கொடுக்கப்பட்டது. அப்போது விநியோகஸ்தராக இருந்த தாணு விளம்பரத்திற்காக போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பைரவி என பதிந்து வெளியிட்டார். இதற்கு முதலில் ஏற்றுக்கொள்ள ரஜினி தயங்கினாலும் பின்னர் அவர் ஏற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைநாட்டி வரும் பட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் பெற்றுவிட முடியுமா என்ன?
பட்டம் என்பது தானாக கொடுக்கபட வேண்டியதே தவிர, கேட்டு பெறக்கூடிய விஷயம் இல்லை என பலரும் கருத்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக “ஜெயிலர்” படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.