இன்றைக்கு யாருக்கு எந்த வயசுல என்ன வியாதி வருகிறது என தெரியவில்லை என நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கவலை தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் காவேரி மருத்துவமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”என்னுடைய உடம்பு இசபெல்லா, விஜயா, காவேரி, அப்பல்லோ, ராமசந்திரா, சிங்கப்பூர் எலிசபெத், அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனை வரை சென்றுள்ளது. அதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. மருத்துவத்துறையின் கண்டுபிடிப்புகளால் தான் நான் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கேன்” என தன்னுடைய உடல்நல பிரச்சினையை பற்றி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இப்ப வீட்டு மனைகள் எல்லாம் விற்பனை தொடர்பான விளம்பரங்கள் வருகிறது. இங்க பக்கத்துல பள்ளி, மார்க்கெட், ரயில் நிலையம், பேருந்து நிலையம் இருக்குன்னு சொல்றாங்களே தவிர யாருமே பக்கத்துல நல்ல மருத்துவமனை இருக்குன்னு விளம்பரம் பண்றது இல்லை. இது எல்லாவற்றையும் விட மருத்துவமனை தான் ரொம்ப முக்கியம். இன்றைக்கு யாருக்கு எந்த வயசுல என்ன வியாதி வருகிறது என தெரியவில்லை. ஏனென்றால் எல்லாமே மாசுவாக மாறிவிட்டது. தண்ணீர், காற்று, பூமி, பச்சை குழந்தைகளுக்கு கொடுக்கிற மருந்தில் கூட கலப்படம் நிறைந்துள்ளது. அவர்களை என்ன செய்ய வேண்டும். கையில் விலங்கு போட்டு தெருவுல இழுத்திட்டு போய் சாகுற வரைக்கும் சிறையில போட வேண்டும்” என தெரிவித்தார்.
பிஸியாக நகரும் திரைவாழ்க்கை :
கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் மூலம் மிக சிறந்த கம்பேக் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது வரை அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தன்னுடைய மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான 'லால் சலாம்' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதில் அவர் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்து இருந்தாலும் அது அவரின் படமாகவே பார்க்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
தற்போது 'ஜெய்பீம்' புகழ் T. J. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'வேட்டையன்'. மிகவும் மும்மரமாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்மர் விடுமுறையை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்திற்கான திரைக்கதையை முழுவீச்சில் தயார் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படி தன்னுடைய திரைப்பயணத்தில் மிகவும் பிஸியாக பம்பரம் போல சுழன்று கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த்!