பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான‘உழைப்பாளி’ படம் வெளியாகி இன்றோடு 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
3வது முறையாக கூட்டணி
பணக்காரன், மன்னன் படத்திற்கு பிறகு பி.வாசு - ரஜினிகாந்த் கூட்டணி 3வது முறையாக இணைந்த படம் தான் ‘உழைப்பாளி’. இந்த படத்தின் மூலம் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ், 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சினிமா தயாரிப்பில் களமிறங்கியது. இந்த படத்தில் ரோஜா, ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், நிழல்கள் ரவி, மயில்சாமி, விவேக், சுஜாதா, கவுண்டமணி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்தனர். இளையராஜா இசையமைத்த உழைப்பாளி படத்திற்கு, கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தார். படம் வெளியாகி 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.
படத்தின் கதை
ஒரு தொழிற்சாலையில் கூலி வேலை செய்யும் ரஜினிகாந்தை வெளிநாட்டிலிருந்து திரும்பிய பணக்காரனாக நடிக்க 3 சகோதரர்கள் வலியுறுத்துகிறார்கள். அக்காவின் சொத்தை அபகரிக்க நினைக்கும் 3 தம்பிகள் வேண்டுகோளை ஏற்று அந்த சொத்தின் வாரிசாக போலியாக நடிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் பின்விளைவுகளைச் சந்திக்க விரும்பாமல் அந்த வீட்டிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்.
ஆனால் நிஜமாகவே அந்த சொத்தின் வாரிசு ரஜினி தான் என்ற உண்மை அவருக்கு தெரிய வருகிறது. சொத்துக்காக தனது தந்தை மூன்று சகோதரர்களால் கொல்லப்பட்டதும், அம்மா மனநோயாளியாக மாறியதையும் கண்டறிகிறான். தனது குடும்பத்தை சிதைத்த வில்லன்களை பழிவாங்குகிறார். இறுதியாக தான் என்றும் பணத்திற்கு வாரிசாக இருக்க விரும்பவில்லை என்றும், எப்போதும் கூலியாகவே இருப்பதாகவும் ரஜினி கூறுவது போலவும் கூறுகிறார்.
பலமாக அமைந்த பாடல்கள்
உழைப்பாளி படத்தில் இடம் பெற்ற ‘உழைப்பாளி இல்லாத நாடு’ பாடல் இன்றும் உழைப்பவர்களின் தேசிய கீதமாகவே உள்ளது. இதேபோல் ‘ஒரு கோலக் கிளி’, 'ஒரு மைனா’ பாடல்களும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சிவன் வேடத்தில் ரஜினி அர்ச்சகருடன் பைக்கில் செல்லும் காட்சி, கிழவன் வேடம் போட்டு வந்து பெண்ணை வர்ணித்து கவுண்டமணியிடம் சிலாகிப்பது போன்ற காமெடி காட்சிகளில் மாஸ் காட்டியிருப்பார் ரஜினிகாந்த். இந்த படம் அவரது ரசிகர்களின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக அமைந்தது.