நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படம் இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக 72 வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் கொண்டாடப்படுகிறார். அவரின் 169வது படமாக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் ‘ஜெயிலர்’ படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் என பல முன்னணி நட்சத்திரங்கள் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தனர். படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களிடத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் படமும் கலவையான விமர்சனத்தையே பெற்றிருந்தது. ஆனால் ரஜினியின் மாஸ் ஆக்ஷன் காட்சிகள் தியேட்டருக்கு சென்ற ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் படம் வெளியான ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் வந்ததால் ரசிகர்களும் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். இதனால் ஜெயிலர் படத்தின் வசூல் எகிறியது. இப்படியான நிலையில் ஜெயிலர் படம் வெளியாகி முதல் வாரத்தில் ரூ.375.40 கோடி ஈட்டியதாக படக்குழு அறிவித்தது. தொடர்ந்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி படம் உலகமெங்கும் ரூ.525 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே ஜெயிலர் படம் வெளியாகி 3 வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் முதல் வாரத்தில் ரூ.159.02 கோடியும், 2வது வாரத்தில் ரூ.42.83 கோடியும், 3வது வாரத்தில் இதுவரை ரூ.18.28 கோடியும் வசூல் செய்துள்ளதாக சினிமா டிராக்கர் மனோபாலா விஜயன் தெரிவித்துள்ளார்.