கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.


முன்னதாக படம் குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ஆகஸ்ட் 15 அல்லது 22 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அப்டேட்டை தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கி கடலூர், சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூர் என படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


 






தொடர்ந்து ஜெய்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கடலூர் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்வித்தன.


இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு சத்தமே இல்லாமல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், பட ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்ட படக்குழு விரைவில் படத்தின் தேதியை அறிவிக்க உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


‘டாக்டர்’ படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை . இதனையடுத்து பெரும் விமர்சனத்து ஆளானார் நெல்சன். பீஸ்ட் படம் வெளியாவதற்கு ஜெய்லர் படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில்,  ரஜினியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாறா நெல்சன் என ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில், இப்படம் நடிகர் ரஜினிகாந்தை பெரிதும் திருப்தி படுத்தியுள்ளதாகவும், தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக ஜெய்லர் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.