நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ரூ.300 கோடி வசூலை பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முன்னதாக படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் படமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. குறிப்பாக முந்தைய படங்களின் தோல்வியால் கடும் விமர்சனங்களை சந்தித்த ரஜினியும், நெல்சனும் கம்பேக் கொடுத்துள்ளனர். 






இதுவரை இல்லாத அளவுக்கு  தமிழ்நாட்டில் 900, கேரளாவில் 400, கர்நாடகாவில் 1093 ஸ்க்ரீன்களில் ஜெயிலர் படம் திரையிடப்பட்டுள்ளது.  போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட்டுகள் என தியேட்டர் வளாகங்களும் களைகட்டிய நிலையில் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஜெயிலர் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெயிலர் படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.49 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. 2வது நாளில் சரிவை சந்தித்தாலும், சனி, ஞாயிறு நாட்களில் கலெக்‌ஷனை அள்ளியுள்ளது. 


 இந்நிலையில் ஜெயிலர் படம் 4 நாட்களில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சேர்த்து ரூ. 300 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு வெளியான 2.0  படத்துக்கு பிறகு மிக விரைவில் ரூ.300 கோடியை எட்டிய ரஜினி படம் என்ற சாதனையை ஜெயிலர் பெற்றுள்ளது. அதேசமயம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி தமிழ் சினிமாவில் நிலவி வரும் நிலையில், 72 வயதிலும் ”களத்திலும் நான் என்றும் சூப்பர் ஸ்டார்” என ரஜினி பதில் தனது சாதனைகள் மூலம் சொல்லியுள்ளார். மேலும் இன்னும் ஓடிடி ரைட்ஸ், சேட்டிலைட் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் ஆகியவை மூலமாக கிடைத்த வருமானம் என ஜெயிலர் படம் யாரும் எட்டாத உயரத்தில் மிகப்பெரிய சாதனையை விரைவில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.