சேரன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் வருடம் வெளியான பொக்கிஷம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இணையாத காதலர்களைப் பற்றிய படங்களில் ஒரு அரிய பொக்கிஷம் சேரனுடைய இந்தப் படம்.
கதை
கல்கத்தாவைச் சேர்ந்த ஒரு மரைன் இஞ்சினியரான லெனினும் நாகூரைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த நதிராவும் யதேச்சையாக சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருக்கும் இடையில் நல்ல பழக்கம் ஏற்பட்டு காதல் உருவாகிறது. லெனின் நாதிராவிற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கடிதமும் அனுப்புகிறார். ஆனால் நதிராவின் குடும்பம் தஙகளது வீட்டை விற்றுவிட்டு ஊரை விட்டு சென்று விடுகிறார்கள்.
தனது பெற்றோரின் கட்டாயத்தின் பேரின் லெனின் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். பல வருடங்களுக்குப் பிற்கு லெனினின் மரனத்திற்குப் பின் அவரது மகேஷ் தனது தந்தையின் இந்த முடிவடையாத காதல் கதையைப் பற்றி தெரிந்துகொள்கிறார். தனது அப்பா நதிராவிற்கு எழுதி வைத்திருக்கும் கடிதத்தை கண்டுபிடிக்கிறார் மகேஷ். நதிராவை தேடிச் செல்கிறார். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் கடைசியாக நதிரா மலேசியாவில் இருப்பதாக தெரிந்து கொள்கிறார். நதிராவை அவர் சந்திக்கச் செல்கையில் கதவை திறக்கும் சிறுவனை நதிராவின் மகன் என்று நினைத்துக் கொள்கிறார் மகேஷ். தனது தந்தையின் கடிதத்தை நதிராவிடம் கொடுக்கிறார் மகேஷ். இறுதியாக நமக்குத் தெரிய வருவது நதிரா இறுதிவரை யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதே.
பரபரப்பான உலகின் ஒரு நிதானமான காதல்
பொக்கிஷம் திரைப்படம் வெளியானது 2009 ஆம் வருடத்தில். கிட்டதட்ட கடிதம் எழுதி காதலிக்கும் ஒரு வழக்கமே இல்லாமல் ஆகிவிட்டிருந்தது. ஆனால் பொக்கிஷம் படத்தின் கதை தொடங்குவது 1970களில். எந்த வித அவசரமோ பரபரப்போ இல்லாமல் நாட்கணக்கில் காதலர்கள் தங்களுக்கான கடித்ங்களை எதிர்பார்த்து காத்திருந்த காலம். சேரனின் கதாபாத்திரங்கள் எப்போதும் ஒரு மெல்லிய சோகத்தை தங்களது முகத்தில் தாங்கிக் கொண்ட்டு இருக்கும்.
மிக நிதானமாக ஏதோ ஒரு புத்தகத்தில் இருக்கும் வரிகளை உணர்வுப்பூர்வமாக வாசிப்பது போல் அவர்களது குரலில் ஒரு கவித்துவம் இருக்கிறது. லெனின் மற்றும் நதிரா இருவரும் தங்களுக்கு இடையில் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு கடிதத்தையும் முழுவதுமாக திரையில் படிக்கிறார்கள். இன்று பொக்கிஷம் படத்தை நாம் மறுபடி எடுத்துப் பார்க்கும்போதும் முதலில் அந்தப் படத்தில் இருக்கும் நிதானத்திற்கு நம்மால் வரமுடிவதில்லை. ஆனால் சிறிது நேரத்தில் நம்மால் படத்துடன் ஒன்றமுடிகிறது. அதே நேரத்தில் இந்தப் படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு அவரவர் நம்பிக்கைகள் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இன்றையை சிந்தனையில் இருந்து நாம் அதை அணுகுவதைக் காட்டிலும் கதைக்குள் நம்மை முழுவதுமாக ஈடுபடுத்திப் பார்க்கும்போது ஒவ்வொரு உணர்ச்சிகளும் பொக்கிஷமாக தெரிகின்றன