ஸ்ரீ ராகவேந்திரா என்று கூறினால், பலரும் நடிகர் ரஜினிகாந்த் என்று தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு பகவான் ஸ்ரீ ராகவேந்திரருக்காக ஒரு படத்தை எடுத்து, அதனால் ஒரு தோல்வியை சந்தித்தாலும், தன் பக்தியை நிரூபித்தவர் நடிகர் ரஜினிகாந்த்.


இன்றும் ரஜினியின் அடையாளங்களில் ஒன்றாக, ஸ்ரீ ராகவேந்திரர் இருக்கிறார். ரஜினியை தீவிரமாக கொண்டாடுவோர், ஸ்ரீ ராகவேந்திரரை தொடர்ந்து வழிபடுகின்றனர். தனது திருமண மண்டபத்திற்கே ராகவேந்திரர் பெயரை தான் சூட்டியுள்ளார் ரஜினிகாந்த். அவர் எவ்வளவு பெரிய ராகவேந்திரர் பக்தர் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம், ஒரு நடிகர் தனது 100 படத்தை பெரிய அளவில் கவனம் பெறச் செய்யும் படமாகவும், கட்டாய வெற்றி பெறக்கூடிய படமாகவும் கருதுவார்கள்.


ஆனால் தனது 100வது படமாக ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் நடித்த ரஜினி, அதற்கெல்லாம் விதிவிலக்காக இருந்தார். அதுமட்டுமின்றி, அது ரஜினியின் விபரீத ஆசை என்று கூட அப்போது பலர் விமர்சித்தனர். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் தீவிர ரசிகரான ரஜினிகாந்த், அவரது படங்களை எப்போதும் விரும்பிப் பார்ப்பார். அப்படி பார்த்த படம் தான், மந்திராலயா மஹிம். அதில் ராகவேந்திரராக ராஜ்குமார் நடித்திருந்தார்.






அப்போதே தானும் ராகவேந்திரர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் ரஜினிகாந்த். ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் முத்துராமனை அழைத்து, ராகவேந்திரா படத்தை இயக்குமாறு கூறினார் ரஜினி. கமர்ஷியல் படங்களை மட்டுமே செய்து வந்த முத்துராமனுக்கு, ஒரு பக்தி படத்தை இயக்க மனமில்லை. படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் பாலசந்தர் உள்ளிட்டோர் அவரை சமாதானப்படுத்தி, ஒப்புக்கொள்ள வைத்தனர். இதற்காக சில பக்தி படங்களை பார்த்து, தன்னை தயார்படுத்திக் கொண்டார் முத்துராமன். 


படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நிறைவடைந்ததும், அவற்றை எடுத்துக் கொண்டு மந்த்ராலயம் கொண்டு சென்ற சுவாமி ஆசி பெற்றனர். அத்தோடு முடியவில்லை... படப்பிடிப்பு முடிந்து, முதல் பிரதி வந்ததும், அதுவும் அங்கு தான் கொண்டு செல்லப்பட்டது. இப்படி முழுநீள ஆன்மிக படமாகவே அவதரித்தது ஸ்ரீ ராகவேந்திரா. தமிழக அரசின் வரிவிலக்கோடு திரையிடப்பட்ட ஸ்ரீ ராகவேந்திரா, பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ரஜினிக்கு பெரிய திருப்தியை தந்தது எனலாம். 37 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் வெளியான ஸ்ரீராகவேந்திரா, என்றும் ரஜினி ரசிகர்களால் மறக்க முடியாத படம்.