தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். கடந்த ஆண்டு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததுடன் நடிகர் ரஜினிக்கு தரமான ஒரு கம்பேக் படமாக அமைந்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து படபடவென அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இன்றைய ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் படு பிஸியாக மாறி மாறி படங்களில் நடித்து வருகிறார். 


 



அந்த வகையில் மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் வெளியான 'லால் சலாம்' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதை தெடர்ந்து 'ஜெய்பீம்' புகழ் டிஜே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாக தயாராக உள்ளது. அதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மோசட் வான்டட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார்.  


இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதை உறுதிப்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அரசு நடிகர் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. 


பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவிப்பது ஐக்கிய அரபு அமீரக அரசு வழக்கம். அந்த வகையில் நடிகர் ஷாருக்கான், மம்மூட்டி, கமல்ஹாசன், சஞ்சய் தத், மோகன்லால், திரிஷா, ஜோதிகா, விஜய் சேதுபதி, கே.எஸ். சித்ரா உள்ளிட்ட பலருக்கும் இந்த விசா வழக்கங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


 



அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு. இந்த விசாவை தனக்கு வழங்கியமைக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு வீடியோ மூலம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். 


"ஐக்கிய அரபு அமீரக அரசின் கோல்டன் விசா அங்கீகாரம் கிடைத்ததை பெருமையாக உணர்கிறேன். மேலும் என்னுடைய நண்பரும் லுலு குழுமத்தின் தலைவர் யூசப் அலிக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் இல்லாமல் இது நடந்து இருக்காது" என தெரிவித்துள்ளார். 


 






 


ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கும் இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் பல பலன்களை பெறலாம். அந்த நாட்டிற்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வரலாம், சொத்து வைத்துக் கொள்ளலாம், 10 ஆண்டுகள் வசிக்கலாம், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு பணியாளர்களுக்கு நிதியுதவி செய்யலாம். இது தவிர கோல்டன் விசா மூலம் பல பலன்களை  பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.