'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் தனக்கென ஒரு இடத்தையும் அன்றே பதிவு செய்துவிட்டார். அதை தொடர்ந்து கர்ணன், மாமன்னன் என ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்து இருந்தார். அந்த வரிசையில் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பாக கடந்த ஆகஸ்ட் 23ம்  தேதி வெளியான திரைப்படம் 'வாழை'. தன்னுடைய சிறு வயதில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அவர் இயக்கிய இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்து வருவதுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 


 




குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் சிறுவர்கள் கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படமாக இருந்தாலும் பாக்ஸ் ஆபீசில் உலகளவில் 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   


'வாழை' படத்தை பார்த்த இயக்குநர் பாலா , மணிரத்னம் , பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் , நடிகர் சூரி , கார்த்தி , இசையமைப்பாளர்  ஜிப்ரான், விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், இயக்குநர் நெல்சன், மிஷ்கின், ராம் , வெற்றிமாறன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீருடன் அவர்களின் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். 


 




அந்த வகையில் 'வாழை' படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை மாரி செல்வராஜுக்கு தெரிவித்து படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பகிர்ந்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்து செய்தியில் ரொம்ப நாளைக்கு பிறகு அற்புதமான ஒரு தரமான படம் வந்து இருக்கு. இந்த படம் மூலம் அவருடைய இளமை பருவத்துக்கே நம்மை அழைத்து சென்றுவிட்டார். அந்த பையன் அனுபவிக்கும் கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தும் நாமே அனுபவிப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.  தன்னுடைய மகன் ஒரு கை சோறு சாப்பிடவில்லையே என அந்த தாய் கதறும் போது மனசெல்லாம் துடிக்கிறது. மாரி செல்வராஜ் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்து இருந்தார்.


 






நடிகர் ரஜினிகாந்தின் இந்த வாழ்த்து செய்திக்கு தன்னுடைய பதிவின் மூலம் நன்றிகளை தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ். "அன்று பழைய தகரபெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடி தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளிருந்து அவனின் பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன் . உங்கள் வாழ்த்திற்கும் அரவணைப்புக்கும்  நன்றிகள் எங்கள் சூப்பர் ஸ்டார் அவர்களே" என நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்து கொண்டுள்ளார்.