குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றதை பாக்கியமாக கருதுவதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று காலை விமானத்தில் பெங்களூரு சென்றார். விமான ஊழியர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், அவர் எதற்காக பெங்களூரு செல்கிறார் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது. இதனிடையே இதற்கு பதிலளிக்கும் வண்ணம் அடுத்த சில மணி நேரத்தில் வீடியோ ஒன்றும் வெளியானது.
அதில் பெங்களூரு சென்ற ரஜினி, மாலையில் தனது அண்ணன் சத்தியநாராயணனுடன் பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி மையத்திற்கு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவில் பெங்களூருவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்திய சிவராத்திரி விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது.
தொடர்ந்து இன்றைய தினம் ரஜினி தனது அண்ணன் சத்யநாராயணாவுடன் மாலையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணன் சத்யநாராயணாவுடன் இருக்கும் தனிப் புகைப்படமும், குடும்ப புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த பதிவில், “எனது சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளையும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளையும் ஒரே நாளில் எனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடினோம். இந்த பொன்னான தருணங்கள் என் இதயத்தில் நிறைந்துள்ளதை நான் பாக்கியமாக உணர்கிறேன்” எனவும் ரஜினி தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக ரெடியாகும் ஜெயிலர்
ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை தமன்னா நடிக்க நடிகர்கள் மோகன்லால், ஜாக்கி ஷெராப், நடிகை ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தரமணி புகழ் வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் , ஜெயிலர் படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியது. இதுவரை 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று ஜெயிலர் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது. இதில் ரஜினியின் கேரக்டரான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.