ரஜினியின் படையப்பா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும் ஒரு சில காட்சிகள் இன்றைய ரசிகர்களிடையே சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் ரஜினியின் மகளை திருமணம் செய்துகொள்ளும் காட்சி தற்போது டிரெண்டாகி வருகிறது. இந்த காட்சியில் நடிகர் மற்றும் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த விஜய் சாரதி ரசிகர்களிடையே கவனமீர்த்துள்ளார்
ரஜினிகாந்தின் 75 ஆவது பிறந்தநாளில் படையப்பா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. கடந்த மூன்று நாட்களாக ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் வரவேற்புகொடுத்து வருகிறார்கள். 25 வருடத்திற்கு பின்னும் இப்படத்தின் காட்சிகள் சற்றும் ஈர்ப்பு குறையாமல் அதே உற்சாகத்தை கொடுத்து வருகிறது. முதல் வாரத்தில் படையப்பா திரைப்படம் ரூ 11 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
ட்ரோல் செய்யப்படும் காட்சிகள்
படத்தின் பாடல்கள் , ரஜினியின் ஸ்டைல் , ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு ஆகியவை கொஞ்சம் கூட சலிப்பில்லாமல் அதே வசீகரத்தோடு இருக்கின்றன. இருந்தாலும் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு சில காட்சிகளில் உடன்பாடு இல்லை. குறிப்பாக தனது மகளுக்கு ரஜினி திருமணம் செய்து வைக்கும் காட்சி. முதல் மகள் தான் வேறு ஒருவரை காதலிப்பதாக சொன்னதும் உடனே மாலையை தனது இளைய மகளுக்கு ரஜினி மாட்ட சொல்லும் காட்சி பிற்போக்குத்தனமாக இருப்பதாக இளம் தலைமுறையினர் சுட்டிகாட்டியுள்ளனர். அதேபோல் இந்த காட்சியில் மாப்பிள்ளையாக வரும் விஜயசாரதி தான் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளார். மாப்பிள்ளை , அக்கா திருமணம் வேண்டாம் என்று சொன்னதும் தங்கையை உடனே கல்யாணம் பண்ண சம்மதிக்கிறார். இந்த காட்சியை பகிர்ந்த ரசிகர்கள் ' என்னடா யாரு கழுத்துல தாலி கட்ட சொன்னாலும் சரினு சொல்றான்' என பதிவிட்டு வருகிறார்கள்
விஜய் சாரதி ரிப்ளை
தன்னை ட்ரோல் செய்தாலும் நடிகர் விஜய் சாரதி இதனை பாசிட்டிவாகவே எடுத்துக்கொண்டுள்ளார். தனது சமூக வலைதளத்தில் அவர் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளார் " என்னுடைய நிறைய நண்பர்கள் எனக்கு போன் செய்து நீங்கதான் இப்போ டிரெண்டு என சொல்கிறார்கள். இப்போது இந்த காட்சியைப் பார்த்தபோது எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் படத்தில் எனது தாய்மாமா படையப்பா சொன்னால் அதற்கு ஆம் என்கிற பதிலை சொல்வதை தவிர எனக்கு வேற வழியில்லை. தாய்மாமா சொன்னால் கேட்காமல் இருக்க முடியுமா என அவர் தனது பதிவில் கூறியுள்ளார்