ஆக்ஸ்ட் 10ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்டுகளை நொறுக்கி புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.


ஜெயிலர் வசூல் தாண்டவம்


ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் என பல மொழி சூப்பர்ஸ்டார்களுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


ஜெயிலர் படம் வெளியானது முதல் நேற்று வரை ஆறே நாள்களில் 400 கோடிகளுக்கும் மே வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


உலகம் முழுவதும் சுமார் 7000 திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் வெளியான நிலையில், முதல் நாள் வசூல்  மட்டுமே 95.78 கோடி ஈட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை, ஆனால் பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் sacnilk உள்ளிட்ட பல தளங்களும் இதனை உறுதிப்படுத்தி வருகின்றன.


அடுத்தடுத்த படங்கள்


இப்படி ஜெயிலர் படம் வெளியாகி விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், மற்றொருபுறம் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் பற்றிய அப்டேட்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.


அதன்படி லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் உடன் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் கைக்கோர்க்க உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.


புது கெட் அப்...எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்


இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன் 171ஆவது படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், இதுவரை பார்த்திராத வித்தியாசமான கெட் அப்பில் ரஜினி இப்படத்தில் தோன்ற உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


முன்னதாக ரஜினிகாந்த் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய லிங்கா படத்தில்  இரட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில்,  சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவர் மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக பகிரப்படும் தகவல், ரஜினிகாந்த் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஆன்மீகப் பயணம் முடிவு


நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன் இமயமலை ஆன்மீகப் பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள தயானந்த் சரஸ்வதி மடம், வியாசர் குகை, உள்ளிட்ட இடங்களுக்கு ரஜினிகாந்த் சென்ற புகைப்படங்கள் கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்ன்றன.


அத்துடன் முன்னதாக பாபா குகைக்கு செல்வதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 2 மணிநேரம் ரஜினிகாந்த் மலை ஏறிய புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின.


இந்த வரிசையில் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் இருக்கும்  புகைப்படங்கள் இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


மேலும் படிக்க: HBD Shankar : கற்பனையில் கூட பிரமாண்டத்தை தெறிக்கவிடும் ஷங்கர்..இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாள் இன்று..


Nawazuddin Siddiqui : திருநங்கை வேடத்தில் மாஸாக களமிறங்கும் ரஜினி பட வில்லன்.. குதூகலமான ரசிகர்கள்..