ஒரு உதவி இயக்குநராக முதல் படியை தொட்ட ஒருவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை பிற்காலத்தில் தமிழ் சினிமாவில், தான் ஒரு பிரமாண்டமான இயக்குநராக கொண்டாடப்படுவார் என்பது. அப்படி தமிழ் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டத்தை கொண்டு வந்து நிறுத்திய முதல் இயக்குநர் ஷங்கரின் 60-வது பிறந்தநாள் இன்று. 


அடுத்தடுத்து பிரமாண்டம்: 


இயக்குநர் எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குநராக தனது திரைப் பயணத்தை தொடங்கிய ஷங்கர் முதல் படத்தை 1993-ஆம் ஆண்டு இயக்கினார். 'ஜென்டில்மேன்' என்ற முதல் படத்திலேயே பிரமாண்டத்தை காட்டிய ஷங்கர் அதனை தொடர்ந்து அவர் இயக்கிய அனைத்து படங்களுமே பிரமாண்டமான தயாரிப்புகளாகவே மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகவே இருந்தன. 



காதலன், ஜீன்ஸ், இந்தியன், பாய்ஸ், முதல்வன், சிவாஜி : தி பாஸ், அந்நியன், எந்திரன், நண்பன், ஐ, 2.0 என அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்களாகவே இருந்தன. அதனாலேயே அவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் என்றே அழைக்கப்பட்டார். தற்போது அவர் இயக்கி வரும் 'இந்தியன் 2 ' படம் பல காரணங்களால் தடைபட்டு தற்போதுதான் முடியும் தருவாயில் வந்துள்ளது. 


வசூல் ரீதியிலும் வெற்றி: 


ஷங்கர் விரல் விட்டு என்னும் அளவிலான படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் அவை பெரும்பாலும் மிகப்பெரிய வெற்றி படங்களாகவே அமைந்துள்ளன. ஒரு சில படங்கள் வசூல்ரீதியாக சரிவை சந்தித்து இருந்தாலும் அதிலும் பிரம்மாண்டத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது. இருப்பினும் தனது ஒவ்வொரு படத்தின் மூலம் தனது வரலாறை எழுதியவர் இயக்குநர் ஷங்கர். அவரின் கதையில் மட்டுமல்ல  கற்பனையிலும் பிரமாண்டம் கலந்தே இருக்கும். 


கதை பிம்பம் : 


ஷங்கர் தனது திரைப்படங்கள் மூலம் புது தொழில்நுட்ப வளர்ச்சிகளை புகுத்தி பல விஷயங்களை வெளிப்படுத்தியவர். அவரின் ஒவ்வொரு படைப்பிலும் ஏதாவது நடைமுறை அவலங்களை மையமாக வைத்து உருவாக்கி இருப்பார். அதற்கு அவர் ஸ்டைலில் சில தீர்வுகளையும் கொடுத்து இருப்பார். கதாநாயக பிம்பம் மட்டுமின்றி கதைக்கான நாயக பிம்பமும் தருவதாக இருந்ததோடு, மக்களின் மனங்களில் நிலையான ஒரு இடத்தையும் கொடுத்தது. 



பொருத்தமான திரைக்கதை: 


சரியான இடைவெளி விட்டு படங்களை கொடுப்பதால் அவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். மிக பெரிய ஸ்டார் நடிகர்களை வைத்து இயக்கினாலும் அவர்களுடைய கதாபாத்திரத்துக்கு தேவையான வெயிட்டேஜ் கொடுத்து காட்சிகளிலும் , வசனங்களிலும் மாஸ் காட்டி அபாரமான திரைக்கதையால் ஆக்கிரமித்து விடுவார். அதே சமயத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் அவரின் படம் சென்றடைவதில் மிகவும் கவனமாக இருப்பார். அதுவே அவரின் தனி சிறப்பு என்றும் சொல்லலாம். 


ஒரு இயக்குநராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் காதல், இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, வெயில், ஈரம், அறை எண் 305-ல் கடவுள் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 


அவரின் முந்தைய இலக்குகளை அவரே முறியடிப்பதில் வல்லவர். அந்த வகையில் தற்போது அவரின் இந்தியன் 2 திரைப்படம் பல மைக்கல்களை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.