லால் சலாம்


ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்கில் வெளியான படம் லால் சலாம். விஷ்ணு விஷால் , விக்ராந்த் , முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து  லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை போற்றும் வகையில் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது. 


தொலைந்து போன ஹார்ட் டிஸ்க்


முன்னதாக ஜனவரி மாதம் இப்படம் வெளியாக இருந்த நிலையில் இறுதி நேரத்தில் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் இருந்த ஹார்ட் டிஸ்க் தொலைந்துபோனதால் இந்த தாமதம் என்று தெரிவிக்கப்பட்டது. திரையரங்களில் ரஜினி ரசிகர்களால் கொண்டாட்டத்துடன் வரவேற்கப்பட்ட லால் சலாம் படம் சுமாரான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தில் பலவித குறைபாடுகள் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தார்கள். லால் சலாம் படம் ரிலீஸுக்கு இறுதி நேரத்தில் இந்த ஹார்ட் டிஸ்க் தொலைந்துபோனதே படம் முழுமையடையாமல் வெளியிட்டதற்கு காரணம் என்று படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். 


லால் சலாம் ஓடிடி ரிலீஸ்


படம் திரையரங்குகளில் வெளியாகி 6 மாதங்களுக்கும் மேலாக கடந்தும் ஓடிடி தளத்தில் வெளியாகவில்லை. தற்போது லால் சலாம் படம் வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் இந்த போஸ்டரை உற்சாகமாக பகிர்ந்து வந்தார்கள். தற்போது இந்த தகவல் பொய் என்று இந்த போஸ்டர் ரஜினி ரசிகர்களால் உருவாக்கப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.






லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான லால் சலாம்  , மிஷன் , மற்றும் இந்தியன் 2 ஆகிய மூன்று படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது ரஜினியின் வேட்டையன் மற்றும் அஜித்தின் விடாமுயற்சி ஆகிய இரு படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த இரண்டு படங்களின் வெற்றி மட்டுமே முந்தைய படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.