தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். அவரின் கடைசி சில படங்கள் சரியான வெற்றியையும் எதிர்பார்த்த கலெக்‌ஷனையும் பெறாததால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக இருந்தது. இதற்கு ஏற்றவகையில் படக்குழுவும் மிகவும் கவனத்துடன் செயல்பட்டது. குறிப்பாக படத்தின் புரோமோஷன்கள் மிகவும் பிரமாண்டமாக செய்யப்பட்டன. படத்தின் இசை படத்தின் லெவலை உயர்த்த ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாது அனைவரையும் தியேட்டருக்கு வரவழைத்தது. 




ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு முக்கியமான வேடத்தில் தமன்னா மற்றும் கிஷோர் என படத்தில் நட்சத்திர பட்டாளங்கள் இருக்க, படத்தின் மீது ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியது. 




இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி  உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் படத்தின் ஒட்டுமொத்த கலெக்‌ஷன் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இதுவரை அதாவது ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை மொத்தம் ரூபாய் 525 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்தது. 


சென்ற ஆண்டு 487.50 கோடிகள் வசூலை வாரிக் குவித்து சென்ற ஆண்டு சாதனை படைத்த பொன்னியின் செல்வன் படத்தின் வசூலை ஜெயிலர் முறியடிக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த சாதனையையும் ஜெயிலர் முறியடித்து புதிய மைல்கல்லை செட் செய்துள்ளது. 


ரிப்பீடட் ஆடியன்ஸ்:


ரஜினியின் கடைசி படமான அண்ணாத்த  சரியாக ஹிட்டாகாத நிலையில், கவலையில் இருந்த ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் வகையில் ஜெயிலர் படம் அமைந்துள்ளது. மேலும் மாஸான பழைய ரஜினிகாந்தை பார்த்தது போல இப்படம் அமைந்ததால் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷத்தை கொடுத்தது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் என்பதால் ரசிகர்களை குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு வரவைக்க காரணமாக அமைந்தது. மேலும் ரிபீடட் ஆடியன்ஸ் வருகையும் அதிகமாக இருந்தது. 


ரஜினியின் இரண்டாவது படம்!


ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்தின் 2.0 படம் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்த நிலையில், ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூலித்த ரஜினியின் இரண்டாவது படமாக உருவெடுத்துள்ளது.




புதிய சாதனை :


சமீபத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு விழாவில் 'ஜெயிலர்' திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்றும் 1000 கோடி ரூபாய் வரை வசூலை குவிக்கும் என்றும் இயக்குநர் நெல்சன் தெரிவித்திருந்தார். 


ஒரு சீன் கட்


ஜெயிலர் படத்தில் ஒரு மாஸ் சீனில் ரஜினிகாந்த் இருவரை கொலை செய்யும் காட்சி இருக்கும். அதில் ஒருவர் ஐபிஎல் தொடரில் பெரிய அணியாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஜெர்சியை அணிந்திருப்பார். இதனால் ஆர்.சி.பி அணி நிர்வாகம் ஜெயிலர் படத்தில் தங்களின் அனுமதி பெறாமல் எங்களின் ஜெர்சியை பயன்படுத்தியுள்ளதாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதி அந்த காட்சியை நீக்க உத்தரவிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட படக்குழு இந்த காட்சியை வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திரையிடப்படும் காட்சியில் இருக்காது என தெரிவித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதேபோல் ஓடிடி தளத்திலும் இந்த காட்சி இடம்பெறாது என படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக நஷ்ட ஈடோ அபராதமோ நீதிமன்றம் விதிக்கவில்லை.