ரஜினிகாந்த்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், நேற்று மாலை  அனுமதிக்கப்பட்டார் . திடீரென உடல்நலம் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்கள் போலி என்றும்  உடலில் அவ்வப்போது ஏற்படும் சில அசவுகரியங்களுக்கான சிகிச்சைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.


மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து முன்கூட்டியே முடிவு செய்தபின்னர் இன்று அவருக்கு சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், தற்போது வரை ரஜினியின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகின. இருந்தும் மருத்துவமனை சார்பாகவும் ரஜினியின் மனைவி அல்லது மகள் சார்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத காரணத்தினால் ரசிகர்கள் பதற்றத்தில் இருந்து வந்தார்கள். இந்நிலையில் ரஜினியின் உடல் நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது மருத்துவமனை.


ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்


ரஜினி அனுமதிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை சார்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக உள்ளதாகவும் அவர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.





ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , ரித்திகா சிங் , மஞ்சு வாரியர் , ரானா டகுபதி , கிஷோர் , துஷாரா விஜயன் , விஜய் டிவி ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் டிரைலர் நாளை அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வேட்டையன் டிரைலர் மற்றும் படம் வெளியாவதை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள் இந்த சூழலில் ரஜினி முழு ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவதையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.