Isha: நீதிமன்ற உத்தரவு! ஈஷா யோகா மையத்தில் கோவை எஸ்.பி., அதிகாரிகள் நேரில் விசாரணை!

கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை நடத்தினர்.

Continues below advertisement

கோயம்புத்தூரில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். இங்கு ஏராளமானோர் தங்கி ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவை வடவள்ளி பகுதியசை் சேர்ந்த பேராசிரியர் காமராஜர் என்பவர் ஈஷா யோகா மையத்திற்கு எதிராக நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்தார்.

ஆட்கொணர்வு மனு:

Continues below advertisement

அந்த வழக்கில் தன்னுடைய இரு மகள்களான கீதா மற்றும் லதா இருவரையும் மூளைச்சலவை செய்து ஈஷா யோகா மையத்தில் தங்க வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த ஆட்கொணர்வு மனுவுடன் சேர்ந்து, ஈஷா யோகா மையத்தின் மீதான பல குற்றச்சாட்டுக்களையும் அவர் முன்வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரின் இரண்டு மகள்களிடமும் நேரில் விசாரணை நடத்திய பிறகு, இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈஷா யோகா மையத்தில் இன்று விசாரணை:

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், டி.எஸ்.பி. சிவக்குமார், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் இணைந்து விசாரணை நடத்தினர்.

பேராசிரியர் காமராஜரின் மகள்கள் மட்டுமின்றி அங்குள்ள மற்றவர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் விரிவான அறிக்கையை வரும் அக்டோபர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த காரணத்தால் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

8 ஆண்டுகளாக வழக்கு:

மேலும், பேராசிரியர் காமராஜர் தனது இருமகள்களையும் பார்க்கவிடாமல் ஈஷா யோகா மையம் தடுப்பதாகவும், தங்களை மீட்டுத்தரக் கோரி தொடர்ந்து வலியுறுத்தினால் உண்ணாவிரதம் இருப்பதாக அவரது இளைய மகள் மிரட்டுவதாகவும் காமராஜர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். பேராசிரியர் காமராஜர் தனது மகள்களை மீட்டுத்தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் ஈஷா யோகா மையத்தின் மீது உள்ள மற்ற வழக்குகள் குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement