தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான அண்ணாத்த படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் என அனைத்தும் பட்டையை கிளப்பின. நடிகர் ரஜினிகாந்தும் தனது பேரன்களுடன் அண்ணாத்த திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தார்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கவுரவம் மிக்க தாதா சாகேப் பால்கே விருது குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் பெற்றார் ரஜினிகாந்த். இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் ரஜினிகாந்த்.


தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய ரஜினிகாந்துக்கு பல மொழிகளை சேர்ந்த திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்து மழையில் நனைந்துக் கொண்டிருந்த நடிகர்  ரஜினிகாந்த் திடீரென உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது.


கடந்த 28 ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் தாமாக காரை மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. அவருடன் அவரது மகள் சவுந்தர்யாவும் அவரது கணவர் விஷாகனும் மருத்துவமனை சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த் டெல்லி பயணத்தால் கலைப்புடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்கான தான் மருத்துவமனை சென்றதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.


அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு நரம்பியல் மற்றும் இதய நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை காவேரி மருத்துவமனையும் அறிக்கை மூலம் உறுதிபடுத்தி உள்ளது. ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இன்று காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார். "உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்." எனவும் முதலமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்தததாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார். 
ரஜினிகாந்த் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டி அவரது ரசிகர்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 108 தேங்காய்களை உடைத்து ரஜினிகாக்க சிறப்பு பூஜை செய்தனர். அத்துடன் ஸ்ரீ வெயில் உகந்த அம்மன் கோயிலில் மண்சோறு சாப்பிட்டு ரஜினி உடல்நலம்பெற வேண்டினர்.



Caption