சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 2019ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அவருக்கு அப்போது விருது வழங்காத சூழல் நிலவியது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரஜினிகாந்த்திற்குவாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாகேப் பால்கே விருது இன்று வழங்கப்பட்டது. 45 ஆண்டுகள் கலை சேவைக்காக அவருக்கு இந்த விருதை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ரஜினியிடம் வழங்கினார். 


ரஜினிக்கு விருது வழங்கும்போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர். விருதை பெற்றுக்கொண்ட பின் பேசிய ரஜினிகாந்த், தான் பெற்ற விருதை தன்னுடைய குருவுக்கும், பெற்றோருக்கும் சமர்பித்தார். குறிப்பாக ரஜினி நடத்துனராக இருந்த போது, அவருடன் வேலை பார்த்தவரும் பேருந்து ஓட்டுநருமான ராஜ் பகதூருக்கும் இந்த விருதை சமர்பிக்கிறேன் என தெரிவித்தார். 




தன்னை நடிக்கக் கூறி வற்புறுத்தியவரே அவர்தான் என ஒற்றை வரியில் முடித்தார் ரஜினி. சூப்பர் ஸ்டார் என இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகனின் பயணம் சக ஊழியரால், ஒரு நண்பனால் உந்தப்பட்டது என்பதே ஒரு நெகிழ்ச்சியான கதை தான். மத்திய அரசின் விருது விழா மேடையில் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு ரஜினிக்கு அவர்  நண்பர் ராஜ் பகதூர் செய்தது என்ன? யார் இந்த ராஜ் பகதூர்?


''கண்ணனுக்கு கோயில் உண்டு கர்ணனுக்கு ஏன் இல்லை? நட்புக்கு ஒரு கோயில் கட்டு.. அதில் ஒன்றும் தவறே இல்லை'' என்ற பாடல் வரிகள் யாருக்கு பொருந்துமோ இல்லையோ, ரஜினி -  ராஜ் பகதூர் நட்புக்கு சரியாக பொருந்தும். ரஜினியின் வாழ்க்கையே வேற லெவலில் மாற்றிய ராஜ் பகதூரும் ரஜினியும் ஒரே நாளில் தான் பணிக்கு சேர்ந்தனர்.  10 ஏ பஸ்... ஸ்ரீநகர் டூ மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்ட் ரூட்.. இதுதான் இந்த நட்பின் தொடக்கம்.


புது வேலை.. என பேருந்தில் ஓட்டுநராக ஏறி அமர்ந்தார் ராஜ் பகதூர். அதே பேருந்தில் நடத்துநராக நின்றுகொண்டிருந்தார் ரஜினிகாந்த். இருவருமே வேலைக்கு புதுசு என்பதால் அந்த புது இடம் அவர்களுக்கு நல்ல அறிமுகத்தையும், சிறந்த நட்பையும் கொடுத்தது. பேருந்துக்குள் பரபரவென ஸ்டைலாக நடக்கும் ரஜினி, விசிலடிக்கும் ஸ்டைல், டிக்கெட்டை கிழித்துக் கொடுக்கும் லாவகம் என முதல் நாளே ரஜினி ராஜ் பகதூரை கவர்ந்துள்ளார். இவருக்குள் என்னமோ இருக்கு என யோசித்த ராஜ், தாங்கள் நடிக்கும் நாடகங்களில் ரஜினியையும் நடிக்க வைத்துள்ளார்.




ரஜினி எடுக்கும் வேடங்கள் அனைத்துமே மிகக்கடினமான கதாபாத்திரங்களாகவே இருக்குமாம். குருஷேத்திரம் நாடகத்தில் துரியோதனன், சதாரா நாடகத்தில் முக்கிய கதாபாத்திரம் என நடித்தால் வில்லன் தான் என மாஸ் காட்டுவாராம் ரஜினி. அவரின் நடிப்பும், ஸ்டைலும் அந்த சின்ன நாடகத்திலேயே கவனம் பெற்றது. ரஜினிக்காக அப்போதே ஒரு கூட்டம் காத்திருந்தது. ரஜினி வந்தாலே விசில் பறந்தது. 


ரஜினி நாடகத்தோடு நின்றுவிடக்கூடாது என நினைத்த ராஜ் பகதூர், அப்போதைய சென்னையான மெட்ராஸை நோக்கி போ எனக் கூறி இருக்கிறார். உனக்கு சரியான இடம் மெட்ராஸ் ப்லிம் இன்ஸ்டிடியூட் என கைகாட்டிய ராஜ், அங்குதான் உனக்கான வாழ்க்கை இருக்கிறது என அழுத்தமாக கூறியுள்ளார். ஆனால் ரஜினிக்கு தயக்கமே முன்னால் வந்து நின்றுள்ளது. ராஜ் பகதூரின் தொடர் அழுத்தம் காரணமாக மெடிக்கல் லீவ் போட்டுக்கொண்டு சென்னை கிளம்பினார் ரஜினி. அன்று கிளம்பி சென்னை மண்ணை மிதித்த ரஜினிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் தானே சூப்பர் ஸ்டார் என்று. மெடிக்கல் லீவ், அவ்வப்போது கண்டக்டர் வேலை என இரண்டு வருடம் கர்நாடகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் மாறி மாறி ஓடியுள்ளார் ரஜினி. அந்த ஓட்டம் தான் இன்று ரஜினியை மத்திய அரசு விருது வாங்க வைத்துள்ளது. 




நடிப்புப் பயிற்சியில் ரஜினியின் நாடக நடிப்பை பார்த்த கேபாலசந்தர், ரஜினியை கூப்பிட்டு தமிழ் கத்துக்கோ எனக் கூறிவிட்டு சென்றுவிட்டாராம். ரஜினியின் வாழ்வில் ஒளியை உணர்ந்த ராஜ் பகதூரே ரஜினிக்கு தமிழையும் கற்றுக்கொடுத்துள்ளார்.  மிக விரைவாக தமிழ் கற்றுக்கொண்ட ரஜினி பாலச்சந்தரை சந்தித்து தமிழில் பேசி அசரடித்துள்ளார். ரஜினியின் தமிழ் உச்சரிப்பை பாரத்து அசந்த கேபாலச்சந்தர் அவரை அபூர்வ ராகங்கள் படத்தில் களம் இறக்கினார். அதன்பின்னர் ரஜினியின் சினிமா பயணம் ஊர் அறிந்ததே. காலங்கள் உருண்டோடினாலும், தான் சூப்பர் ஸ்டாராகி தன் நிலை மாறினாலும் 10ஏ தான் ஒரு பேருந்து நடத்துநர் என்பதை ரஜினி என்றும் மறப்பதே இல்லை. மெட்ராசுக்கா? என தயங்கி நின்ற ரஜினியை உன்னால முடியும் நீ போ என முதுகில் தட்டி அனுப்பிய ராஜ் பகதூரை என்றுமே நினைவு கூறும் ரஜினி, இன்றும் விருது மேடையில் நினைவு கூர்ந்தார். இமயமலை சென்றாலும், பெங்களூர் சென்றாலும் இன்றும் ரஜினிக்கு உற்ற நண்பனாய் இருக்கிறார் ராஜ் பகதூர். காலம் ஓடி, கோலம் மாறினால் என்ன? நீ 10ஏ பஸ் ட்ரைவர், நான் 10ஏ பஸ் கண்டக்டர் என ராஜ் பகதூரின் தோளை இன்றும் தட்டுகிறார் ரஜினி.