புதுச்சேரி: புதுச்சேரியில் 25% கேளிக்கை வரி, 18% GSTவரி விதிப்பால் ஆகஸ்டு மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை என தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு செய்துள்ள நிலையில் கூலி திரைப்படம் Coolie Movie வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்டு மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை

இந்தியாவில் கேளிக்கை வரி என்பது, நாட்டில் அதிக அளவில் வெளியாகும் திரைப்படங்கள் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரியாகும், மேலும் மொத்த வசூல், பெரிய வணிக நிகழ்ச்சிகள் மற்றும் பெரிய தனியார் விழாக்களில் இருந்து குறைக்கப்படுகிறது. கேளிக்கைவரி கழித்த பிறகு வரும் தொகை நிகரம் என அழைக்கப்படுகிறது.

புதுச்சேரியில் 25% கேளிக்கை வரி, 18% GSTவரி விதிப்பால் ஆகஸ்டு மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை என தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு செய்து உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் தியேட்டர் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரி மற்றும் திரைபடங்களுக்கு மாநில அரசின் கேளிக்கை வரி என்ற இரட்டை வரி விதிப்பு முறை தற்போதுவரை அமலில் உள்ளது.

கூலி திரைப்படம் (Coolie Movie) வெளியாவதில் சிக்கல்

கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது, புதுச்சேரியில் கூலி திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டை ஹம்சினி எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

தியேட்டர்களில் போதுமான வசூல் இல்லை

புதுச்சேரியில் ரூ.100க்கும் குறைவான சினிமா டிக்கெட்டுக்கு 12 சதவீதமும், ரூ. 100க்கு மேல் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மேலும் கேளிக்கை வரி 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தியேட்டர்களில் போதுமான வசூல் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வரும் சூழல் நிலவி வருகிறது.

இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, தமிழகத்தை ஒப்பிட்டு கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, உள்ளாட்சித்துறை செயலரை அழைத்து நடவடிக்கை எடுக்கும் படி முதல்வர் உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் வருகின்ற ஆகஸ்டு மாதம் முதல் புதுச்சேரிக்கு திரைப்படங்களை வெளியிட போவதில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர் ஒருவர் கூறுகையில், தமிழ்நாட்டில் கேளிக்கை வரியை 4 சதவீதமாக குறைத்து விட்டனர். ஆனால் புதுச்சேரயில் 25 சதவீதம் என்பது ஏற்புடையது அல்ல. பல முறை அரசிடம் கோரிக்கை வைத்தும் அரசு எங்களை கண்டு கொள்ளவில்லை. இதன் காரணமாகவே புதுச்சேரியில் சினிமா தியேட்டர்கள் பல மூடபட்டு வருகிறது. 18 திரையரங்கிற்கு மேல் மூடிவிட்டார்கள்.

தமிழகத்தை போல கேளிக்கை வரியை புதுச்சேரி அரசு குறைக்க வேண்டும். இது நியாயமான கோரிக்கை தான், இதனை அரசு செய்து தரும் என நம்புகிறோம். ஆகஸ்டு மாதம் முதல் புதுச்சேரிக்கு திரைப்படங்கள் இல்லை என விநியோகிஸ்தர்கள் முடிவு செய்துள்ளார்கள். ஆனால் எந்த தேதி என அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.