தமிழ் திரையுலகின் உச்சபட்ச நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
கூலி:
லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதாலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் என்பதாலும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கைதி, விக்ரம் படங்கள் மூலமாக தனக்கென தனி யுனிவர்சை உருவாக்கிய லோகேஷ் கனகராஜின் இந்த படம் ரஜினிகாந்தின் தனிப்படமாகவே உருவாகிறது.
இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
கோடை விருந்து:
இந்த நிலையில், கூலி படம் அடுத்தாண்டு கோடை விருந்தாக வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 2025ம் ஆண்டு கோடை கொண்டாட்டமாக கூலி படம் வெளியாகும் என்ற தகவலால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூலி படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகர்ஜூனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படமானது தங்கக்கடத்தலை மையமாக கொண்டு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தந்தை – மகள் பாசப்போராட்டத்தை அடிப்படையாக ஆக்ஷன் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகிறது.
கைதி 2 தொடக்கம்:
லோகேஷ் கனகராஜ் கூலி படத்திற்கு பிறகு தன்னுடைய எல்.சி.யூ. வரிசை படத்தை இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கான பணியாக கைதி 2 படத்தை அவர் தொடங்க உள்ளார். கைதி 2 படத்திற்கான பணிகள் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி நடிப்பில் உருவான கைதி படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில். எல்.சி.யூ. படங்களின் தொடக்கமாகவே அமைந்ததே அந்த படமே ஆகும். டில்லி விரைவில் வருவான் என்று ஏற்கனவே ட்விட் போட்டு கைதி 2 படத்தை உறுதி செய்திருந்தார்.
கைதி 2 படம் மட்டுமின்றி ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்காக தனி படத்தையும் இயக்க உள்ளார். ஒட்டுமொத்த எல்.சி.யூ. கதாபாத்திரங்களும் அடங்கிய படமாக இந்த எல்.சி.யூ.வின் கடைசி படமாக விக்ரம் 2 உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.