இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, அமீர் கான், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று அதிருப்தியை ஏற்படுத்தியது.
இருப்பினும், வணிக ரீதியாக பெரிய லாபத்தை சம்பாதித்துள்ளது. படம் வெளியான முதல் நாளே ரூ.150 கோடி வசூலை பாக்ஸ் ஆஃபிஸில் புதிய சாதனையை படைத்தது. இதுவரை இப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கூலி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்படம் குறித்த மற்றொரு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஒரு படம் ரிலீஸ் ஆனால், 8 வாரத்திற்கு பின்பே ஓடிடி தளங்களில் வெளியாகும் என்பது விதி. ஆனால், சமீபத்தில் வெளியான தக் லைஃப், ரெட்ரோ போன்ற படங்கள் ரிலீஸ் ஆன ஒரு மாதத்திலேயே ஓடிடி தளத்தில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தற்போது அதேபோன்று கூலி திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் தேதி வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அமேசான் பிரைம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. வரும் செப்டம்பர் 11ஆம் தேதி கூலி திரைப்படம் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளிவரும் என அறிவித்துள்ளது.