‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணாத்த திரைப்பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி இரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்டு, தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. இரண்டுமே ரசிகர்ளை வெகுவாக கவர்ந்தது.
ஃப்ர்ஸ்ட் லுக்கில் ரஜினிகாந்த் வேஷ்டி சட்டையில் ஸ்டைலாக நிற்கும் காட்சிகளை கண்ட அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதில், சில ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூகவலைதளங்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட நிலையில், சில ரசிகர்கள் உச்சகட்டமாக ஃபர்ஸ்லுக் போஸ்டர் மீது ஆட்டை வெட்டை ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனைக்கண்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினி ரசிகர்களே இது காட்டுமிராண்டித்தனம் என்று கருத்துகள் பதிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.