லால் சலாம் படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் பணிகள் மேற்கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.


நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் பிரபல இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தின் டப்பிங் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. 


விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க இந்தப் படத்தில் ரஜினி மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து ரஜினி நடித்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவுபெற்றது, இதனிடையே டப்பிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் புகைப்படத்தை முன்னதாக ஐஸ்வர்யா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்திருந்தார்.


இந்நிலையில், லால் சலாம் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் மேற்கொள்ளும் வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
 
“மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை, அதுதான் நம்ம நாட்டோட அடையாளம்” எனும் வசனங்களை ரஜினிகாந்த் பேச, ‘டேக் ஓகே பா’ என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரைப் பாராட்டும் வகையில் இந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


 






 


இந்த வீடியோவை பகிர்ந்துள்ள லைகா நிறுவனம், ரஜினிகாந்த் தன் டப்பிங் பணிகளை முடித்து விட்டதாகத் தெரிவித்துள்ளது. லால் சலாம் படத்தின் 20 நிமிட காட்சிகளில் மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் தோன்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.


லால் சலாம் படத்தில் தன் மகளுக்காக கேமியோ கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ள நிலையில், அவரது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.


ரஜினிகாந்த், லோகேஷ் இணைந்துள்ள தலைவர் 171 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்ற வாரத்தில் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த், முன்னதாக ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் உடன் தலைவர் 170 படத்தில் இணைந்த அறிவிப்பு வெளியான நிலையில், இப்படத்தின்  ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாகவும், தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


சன் பிச்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து  ரஜினிகாந்துக்கு இப்படமும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுககிறது.