இந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்தும் நடித்துள்ள வேட்டையன் படம் நாளை மறுநாள் வெளியாகிறது. இதையடுத்து, ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் ரஜினிகாந்த் நடித்து ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற பல படங்கள் இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த படத்தின் ரீமேக் ஆகும். அமிதாப் பச்சன் நடித்த 11 படங்களின் ரீமேக்கில் தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அந்த படங்களின் பட்டியலை கீழே காணலாம்.
சங்கர் சலீம் சைமன் ( அமர் அக்பர் ஆண்டனி):
1977ம் ஆண்டு இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் அமர் அக்பர் ஆண்டனி. 1978ம் ஆண்டு இதே படத்தை சங்கர் சலீம் சைமன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தனர். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இந்தியில் கதாநாயகனாக வினோத் கண்ணா நடித்திருப்பார். தமிழில் கதாநாயகனாக விஜயகுமார் நடித்திருப்பார்.
நான் வாழவைப்பேன் ( மஜ்பூர்):
1974ம் ஆண்டு இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான படம் மஜ்பூர். இந்த படம் தமிழில் 1979ம் ஆண்டு நான் வாழவைப்பேன் என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் சிவாஜி கதாநாயகனாக நடித்திருப்பார். அவருடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்திருப்பார். இந்தியில் அமிதாப் நடித்த மைக்கேல் கதாபாத்திரத்தில் தமிழில் ரஜினி நடித்திருப்பார்.
பில்லா ( டான்):
அமிதாப்பச்சன் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் டான். 1978ம் ஆண்டு வெளியான இந்த படம் பாலிவுட்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படம் ஆகும். இந்த படத்தை தமிழில் பில்லா என்ற பெயரில் 1980ம் ஆண்டு ரீமேக் செய்தனர். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த இந்த படம் தமிழில் ரஜினியின் செல்வாக்கை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
தீ ( திவார்):
ரஜினிகாந்த் புகழை மற்றொரு உச்சத்திற்கு கொண்டு சென்ற படத்தில் தீ படத்திற்க மிகப்பெரிய பங்கு உண்டு. 1981ம் ஆண்டு உருவாகிய இந்த படத்தில் குடும்பத்திற்காக கூலித்தொழிலாளி மிகப்பெரிய கடத்தல் மன்னனாக மாறும் கதைக்களமாக உருவாகியிருக்கும். அண்ணன் – தம்பி பாசப்போராட்டத்துடன் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் 1975ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் உருவான தீவார் படத்தின் ரீமேக் ஆகும்.
மிஸ்டர் பாரத் ( திரிசூல்):
1985ம் ஆண்டு ரஜினிகாந்த் – சத்யராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் மிஸ்டர் பாரத். தனது தாயை ஏமாற்றிய தந்தையை பழிவாங்கும் மகனின் போராட்டத்தை கமர்ஷியலாக சொன்ன இந்த படம் 1978ம் ஆண்டு வெளியானது திரிசூல் படத்தின் ரீமேக் ஆகும்.
படிக்காதவன் ( குத் தார்):
ரஜினிகாந்தின் படங்களில் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் படிக்காதவனுக்கு தனி இடம் உண்டு. சிவாஜி, ரஜினி, நாகேஷ், ஜெய்சங்ர் என பெரிய பட்டாளங்கள் நடித்த இந்த படம் 1985ம் ஆண்டு வெளியானது. இந்த படமும் 1982ம் ஆண்டு அமிதாப் பச்சன், வினோத் மெஹ்ரா, சஞ்சீவ் குமார் நடித்த குத்-தார் படத்தின் ரீமேக் ஆகும்.
மாவீரன் ( மார்ட்):
ரஜினிகாந்த், அம்பிகா நடிப்பில் 1986ம் ஆண்டு வெளியான வித்தியாசமான ஆக்ஷன் படம் மாவீரன். இந்த படம் ரஜினியின் ப்ளாக்பஸ்டர் லிஸ்டில் முக்கியமான படம் ஆகும். இந்த படம் 1985ம் ஆண்டு பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த மார்ட் படத்தின் ரீமேக் ஆகும்.
வேலைக்காரன் ( நமக் ஹலால்):
பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் 1982ம் ஆண்டு வெளியான படம் நமக் ஹலால். அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற இந்த படத்தின் ரீமேக்கே வேலைக்காரன் படம் ஆகும். 1987ம் ஆண்டு வெளியான இந்த படம் ரஜினிகாந்தின் வெற்றி படங்களின் வரிசையில் தனி இடத்தைப் பிடித்த படமாகும்.
தர்மத்தின் தலைவன் ( கஸ்மே வாதே):
ரஜினிகாந்த் படங்களில் எப்போதும் குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படம் தர்மத்தின் தலைவன் ஆகும். 1988ம் ஆண்டு வெளியான இந்த படமும் அமிதாப் படத்தின் ரீமேக் ஆகும். 1978ம் ஆண்டு இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கஸ்மே வாதே படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவானது. தமிழிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
சிவா ( கூன் பசினா):
ரஜினிகாந்த் – ரகுவரன் இணைந்து நடித்த படம் சிவா. ரஜினிகாந்தின் ஆக்ஷன் திரைப்படத்தில் இந்த படத்திற்கு முக்கிய பங்குண்டு. 1989ம் ஆண்டு வெளியான இந்த படம் 1977ம் ஆண்டு வெளியான அமிதாப் பச்சனின் கூல் பசினா படத்தின் ரீமேக் ஆகும்.
பணக்காரன் (லாவரீஸ்):
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி 1990ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பணக்காரன். இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் 1981ம் ஆண்டு வெளியான லாவரீஸ் படத்தின் ரீமேக் இந்த படம் ஆகும்.
அமிதாப் பச்சனின் 11 படங்களின் ரீமேக்கில் நடிகர் ரஜினிகாந்த் தமிழில் நடித்துள்ளார்.