புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் வாகனங்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களை வெளியே தடுத்து நிறுத்தி, மருத்துவமனையில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.


புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் மருத்துவமனையான ஜிப்மர் மருத்துவமனைக்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு குழந்தைகள் நலப்பிரிவு, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி என பல்வேறு பிரிவுகள் இந்த வளாகத்தில் உள்ளது. 


இந்நிலையில், மர்ம நபர்கள் ஜிப்மர் மருத்துவமனையின் இணையதள பிரிவுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து புதுச்சேரி கோரிமேடு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் நோயாளிகளின் உறவினர்களை வெளியேற்றி மருத்துவமனையின் கேட்டை பூட்டி போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தி வருவதால் ஜிப்மர் வளாகப் பகுதி முழுவதுமே தற்போது பரபரப்பாக காணப்படுகிறது.


இதேபோல், திருநெல்வேலி கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.


நேற்று, கோவை அவிநாசி சாலையில் ஸ்டேன்ஸ் என்ன ஆங்கிலோ இந்தியன் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கே நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனவும், அது வெடித்து சிதறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.