ரஜினிகாந்த் பிறந்தநாள்
இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். 1975ம் ஆண்டு அபூர்வ சகோதரர்கள் என்ற படம் மூலமாக முதன்முதலில் நடிகராக அறிமுகமாகினார். தனது வித்தியாசமான உடல்மொழியாலும், நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, அவரது பிறந்தநாள் கொண்டாட்டமாக தளபதி படம் இன்று திரையரங்கில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது.
கூலி
ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சத்யராஜ் , உபேந்திரா , நாகர்ஜூனா, செளபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இணைந்தார். கூலி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு கூலி படத்தின் சிறப்பு அப்டேட் இன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை தற்போது படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு கூலி படத்தின் சிறப்பு அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தங்கள் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். மேலும் நெல்சன் திலிப்குமார் இயக்கவிருக்கும் ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோலிவுட்டின் முதல் 1000 கோடி
மற்ற சினிமாத் துறையில் வரிசையாக படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்றன. இந்தியில் பதான் , ஜவான் ஆகிய படங்கள் 1000 கோடி வசூலித்தன. கன்னடத்தில் கே.ஜி.எஃப் 2 , தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் , பாகுபலி 2 தற்போது புஷ்பா 2 என அடுத்தடுத்து படங்கள் 1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளன. தமிழில் தி கோட் மற்றும் கங்குவா ஆகிய படங்கள் இந்த சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் இரு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூலித்த படமாக கூலி படம் இருக்கும் என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே நம்பி இருக்கிறது.