தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் தெய்வீக நம்பிக்கையுடன் நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டை, கையில் திருஷ்டி கயிறு, ராசி மோதிரம் அணிந்திருப்பதை பார்த்திருப்போம். இத்தனை பேருக்கு மத்தியில் சினிமாவில் மட்டுமல்லாமல் ஆன்மீகத்தலும் தனியாக தெரிபவர்தான்  சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த். ஆன்மீக வழியையும் கடவுள் நம்பிக்கையும் பலமாக முன் நிறுத்துபவராக விளங்கி வருகிறார்.


ஆன்மீகம் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை பின்பற்றாமல், உணர்வு பூர்வமான அறிவியல் கலந்த உண்மையான ஆன்மீகத்தையே எப்போதும் நாடி வருகிறார். நமக்கு மேல் கடவுள் என்ற ஒருவர் உண்டு. அவரின் செயல்கள்தான் வாழ்க்கையில் இன்பம் துன்பமும் நடக்க காரணம் என பல மேடைப்பேச்சுகளில் ரஜினி பேசி உள்ளார்.


ரஜினிக்கு பிடித்த முதல் மூன்று 


கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், ஆரம்ப காலகட்டத்தில் இருந்து ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கி வருகிறார். அதன் நம்பிக்கையாக இவரின் கையில் காப்பினை காணமுடியும். அதற்கு அடுத்து நினைத்தாலே முக்தி தந்திடும் தளம் என சொல்லப்படும் திருவண்ணாமலையில் இருக்கும் அருணாசலேஸ்வரரையும் தொடர்ந்து வழிபட்டு வருகிறார். அதன் பின்னரே மகா அவதார் பாபாஜியை பின்பற்ற ஆரம்பித்தார். இந்த மூன்றிலும் ரஜினிக்கு மிகுந்த பிடிப்பு உண்டு. அதனால்தான் தனது நூறாவது படத்தை ஸ்ரீ ராகவேந்தரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுத்தார். தொடர்ந்து பாபா படத்தில் பாபாஜி பற்றி விளக்கம் கொடுத்திருப்பார். அருணாச்சலம் படத்திலும், ஆன்மீகத்தை சுண்டி இழுக்கும் பின்னணி இசை இடம்பெற்று இருக்கும். இந்த மூன்று படங்களும் ரஜினிக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமான படங்கள். பாபா படத்தில் ஆரம்பத்தில் தன்னை ஒரு நாத்திகவாதியாக காட்டிக் கொண்டிருக்கும் ரஜினி ஒரு கட்டத்தில் கடவுள்  மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார். அதனை உணர்த்தும் வகையில், அப்படத்தில் ஆயிரம் அதிசயம் என்ற பாடல் இடம்பெற்று இருக்கும். இதில் இருக்கும் அனைத்து வரிகளும் ரஜினிக்கு நன்றாகவே பொருந்தி இருக்கும். 
 


“கடவுளை மறுத்து
இவன் நாள் தோறும்
கூறினானே நாத்தீகம்
பகுத்தறிவாளனின்
நெஞ்சினிலே பூத்த
தென்ன ஆதிக்கம்


திருமகன் வருகிற
திருநீரை நெற்றி மீது
தினம் பூசி


அதிசயம் அதிசயம்
பெரியார் தான்
ஆனதென்ன ராஜாஜி”


அத்துடன் பாபா படத்தில் வரும் இஸ்லாமியர் ஒருவருக்கு “அல்லாஹ் அருணாச்சலேஸ்வர” என்ற பெயரில் கடை வைத்து கொடுத்திருப்பார்.  இறைவன் ஒருவனே, அனைத்தும் ஒன்று, மதங்களை தாண்டியவன் இறைவன் என்பதை உணர்த்தும் வகையிலும் மத நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையிலும் இந்த பெயர் பலகை அப்படத்தில் அமைந்திருக்கும். 


இதுபோக பாபா படத்தில் , “ஏகம் ஏவ த்விதீயம் 
(இருவர் மூலம் உருவாகாமல் பிறப்பு இறப்பு இல்லாமல் ஒன்று உள்ளது)
ஏகோ தேவ சர்வ பூதாந்தராத்மா
(இந்த உணர்வு அனைவரிடமும் உள்ளது)
 ஏகா பாஷா பூதகாருண்ய ரூபா
(கருணையே வடிவான அது, ஒளியாக வீசுகிறது)
 ஏகம் லக்சியம் சமாரஸ்யம் சமேஷம்
(சமத்துவத்தை நிலைநாட்டுவதே அதன் லட்சியம்)
 ஏகம் சர்வம் சித்தமானந்த பூர்ணம்
(அனைத்தையும் அடக்கும் அந்த ஒன்று, பரம்பொருளாகும்)” 


என்ற ஆத்மார்த்தமான இசையுடன் ஆன்மீகத்தின் தாத்பர்யத்தை உணர்த்தும் வரிகளும் இடம்பெற்று இருக்கும்.  ஆங்கிலத்தில் சூப்பர் கான்சியஸ் (Super Consciousness) என அழைக்கப்படும் ஒன்றை பற்றியே இந்த வரிகள் ஆழமாக விவரிக்கிறது. பாபா படத்தில் வரும் பாடல்களை இன்றைக்கும் ரியல் லைஃப் மனிதர்களாலும் கனெக்ட் செய்து கொள்ள முடியும். 


இமாலய ஆன்மீக பயணம்


தனது ஒவ்வொரு படங்களின் ஷூட்டிங் முடிந்த பின்பு அல்லது பட ரிலீஸுக்கு சில தினங்கள் முன்பு ரஜினி இமயமலைக்கு சென்று விடுவது வழக்கம். புகழின் உச்சியில் இருக்கும் ரஜினி, அனைத்தையும் மறந்துவிட்டு தாமரை இலை நீர் போல ஆன்மீக பயணம் செல்வதை பார்த்தால் சற்று வியப்பாக இருக்கிறது.ரஜினி தான் அரசியலுக்கு வருவதாக சொன்னபோது கூட அதனை ஆன்மீக அரசியல் என்று அழைத்தார். 


ஒரு பிரபலம் திரைக்குப் பின்னால் எப்படி இருக்கிறார்கள் என்பதை பெரிதாக யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். திரையில் வரும் போது எப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றியே ரசிகர்களின் சிந்தனை இருக்கும். ஆனால், ரஜினிக்கு அப்படி அல்ல. ரீல் வாழ்க்கையிலும் சரி ரியல் வாழ்க்கையில் சரி, அவரின் ரசிகர்கள் அவர் என்ன செய்தாலும் விரும்புவர்களாகவே இருக்கிறார்கள். இன்றைக்கும் ரஜினியை பார்த்தால் அவர் கழுத்தில் அணிந்திருக்கும் ருத்ராட்சம் மீதுதான் அனைவரது பார்வையும் இருக்கும். 


யாருப்பா இந்த ரஜினி?


ரஜினி மீது பலருக்கும் தனிப்பட்ட கருத்து விருப்பு வெறுப்பு என இருக்கலாம். ஆனால், இவர் மேடை பேச்சுகளை விமர்சனம் செய்யவே முடியாது. அத்தனையும் முரண்பாடு இல்லாமல், நிதர்சனமாக இருக்கும். பெயரிலே காந்த் என காந்த சக்தியை வைத்துள்ள ரஜினி அவரின் பார்வையாலும் திறனான ஆன்மிக பேச்சாலும் பலரை ஈர்த்து, உலக மக்களின் பார்வையில் முக்கிய இடத்தை பிடிக்கிறார். புகழ், சொத்து என எல்லாம் இருந்தும் மனிதனுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றான நிம்மதியை ஆன்மீகம் வழியாக தீவிரமாக அறிந்து கொள்ளும் ரஜினி அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்தான்.