திரையுலகின் ஆக்ஸிஜனாக 47 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஒவ்வொரு மனிதனின் வாழ்வுமே இந்த உலகத்திற்கு பல செய்திகளை கடத்திவிட்டு செல்லும். அடுத்தடுத்த சந்ததியினர் அந்த செய்திகளை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு பின்பற்றினால் தங்கள் வாழ்வில் பெரும் முன்னேற்றங்களை சாத்தியப்படுத்த முடியும். 73 வயதாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வாழ்வும் சினிமா பயணமும் கடத்தும் செய்திகளும் அதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும் எக்கச்சக்கமாக இருக்கின்றது. அவற்றில் சில இங்கே...


இளமையில் போராடு: 


திரையுலகில் 47 ஆண்டு காலத்தை கடந்திருக்கும் ரஜினிகாந்த் இப்போது வரை 169 படங்களில் நடித்திருக்கிறார். இந்த 169 படங்களில் 100 படங்களை அவர் சினிமாவுக்கு அறிமுகமான 1975-85 காலக்கட்டத்திலேயே நடித்துவிட்டார். அடுத்த 37 ஆண்டுகளில் 60+ படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார்.


சராசரியாக ஒரு மனிதன் 60 ஆண்டுகள் வாழ்கிறார் எனில், அவரின் கடைசி 20-30 ஆண்டு வாழ்வின் வாழ்க்கைத் தரம் என்பது இளமையில் அந்த மனிதர் போட்ட உழைப்பின் பயனாகவே அமையும். எனில் வயது ஏற ஏற சௌகரியமான வாழ்வை வாழ வேண்டும் என நினைப்பவர்கள் இளமையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைக்க வேண்டும். ரஜினிகாந்த் அதைத்தான் செய்தார். முதல் 10 ஆண்டுகளில் ஓய்வறியாமல் அவர் நடித்த 100 படங்கள்தான் திரையுலகில் நடிகராக அவருக்கான ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்தது. சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது. அதன்பிறகு, அவர் வருடத்திற்கு 10 படம் நடிக்க வேண்டிய எந்த தேவையும் ஏற்படவில்லை. வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும் சரி மூன்று வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும் சரி வசூல் சக்கரவர்த்தி எனும் அரியாசனம் அவருக்காக மட்டுமே காத்திருக்கும். அந்த 10 ஆண்டுகளில் 100 படங்களில் நடித்த போது மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் அவருக்கு ஏற்பட்ட தொல்லைகள் அதிகம். ஆனாலும் தனது கனவை நோக்கி லட்சியத்தை நோக்கி ஓடினார். இன்று அவர் அமர்ந்திருக்கும் இடம் யாரும் அவ்வளவு எளிதில் எட்டிவிட முடியாதது. ஆக, இளைஞர்கள் உடலில் தெம்பிருக்கும் இளம் வயதிலேயே உங்களின் லட்சியத்திற்காக ஓய்வின்றி உழைத்திடுங்கள்...போராடுங்கள். பின்நாட்களில் அந்த உழைப்பும் போராட்டமுமே உங்களை ஒரு உச்சபட்ச இடத்திற்கு கொண்டு செல்லும்.




பற்று:  


ஆரம்பகாலத்தில் 24/7 படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது உடல்ரீதியாக மட்டுமில்லை. மனரீதியாகவும் ரஜினிகாந்த் ஒரு நிலையற்ற தன்மையிலேயே இருந்திருக்கிறார். இதனால் அந்த சமயத்தில் செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும் அவரை பற்றி தாறுமாறாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும். ரஜினியும் பொது இடங்களில் சச்சரவு பத்திரிகையாளர்களுடன் விவாதம் என சர்ச்சைக்குரிய நபராகவே வலம் வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த பொது வாழ்வின் அழுத்தங்கள் அத்தனையையும் தூக்கி எறிந்துவிட்டு நிம்மதியான வாழ்வை வாழ ஆன்மீகத்தை பற்றிக் கொண்டார். இதன்பிறகே ரஜினிகாந்த் மெதுமெதுவாக பக்குவமடைய தொடங்கி  இன்று நாம் பார்க்கும் நிதானமான ரஜினிகாந்த் ஆக மாறியிருக்கிறார். வெளி உலகின் இருண்மைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் வடிகாலாக ஆன்மீகத்தை பார்த்தார். வாழ்வின் பொருள் அறிய ஆன்மாவை உணர இமயமலை வரை அவர் பயணம் செய்ய தொடங்கியதும் இதன் நீட்சிதான்.


ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை என எழுத்தாளர் சுஜாதா கூறியிருப்பார். ஏறக்குறைய இதைத்தான் ரஜினி பின்பற்றினார். கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் ஆன்மீகத்தை பற்றிக் கொண்டார். ரஜினியிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டு எல்லாரும் அவரை போன்றே ஆன்மீகவாதியாக மாற வேண்டும் என சொல்லவரவில்லை. ஆன்மீகம் ரஜினிகாந்த் தேர்ந்தெடுத்த பாதை. தனது வழக்கமான வாழ்வின் அயர்ச்சிகளையும் பிற்றல் பிடுங்கள்களையும் களைந்து Refresh ஆவதற்கான ஆதாரமாக ஆன்மீகத்தை ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டார். அதைபோல, லூப் மோடில் அன்றாடம் நாம் செய்து கொண்டிருக்கும் அயர்ச்சியான வேலைகளிலிருந்து விடுபட பயணம், எழுத்து, விளையாட்டு என நாம் சாராத எதோ ஒரு துறையில் நம் மனதிற்கான திறவுகோல் இருக்கலாம். ரஜினிகாந்த் ஆன்மீகத்தை தேடி அடைந்ததை போல நாமும் அதை தேடி அடைந்தோமெனில் மனரீதியாக எப்போதும் உற்சாகமாக இருக்க முடியும்.


நட்பே துணை:


கலையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் விருதை ரஜினிகாந்த் சமீபத்தில் பெற்றிருந்தார். அந்த விருது வழங்கும் விழாவில் வெகு சிலருக்கு மட்டுமே ரஜினி நன்றி கூறியிருப்பார். அதில், முக்கியமானவர் ராஜ் பகதூர் எனும் நபர். ராஜ் பகதூர் ரஜினிகாந்த்தின் நீண்ட கால நண்பர். தொடக்கக்காலத்தில் ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக இருந்த போது ராஜ் பகதூர் ஓட்டுனராக இருந்தவர். அந்த சமயத்திலேயே சிவாஜி ராவின் திறமையை பார்த்து 'நீ சினிமாவுக்கு நடிக்க போ. பெரிய ஆளாய் வருவாய்' என ஊக்கப்படுத்தியவர் இந்த ராஜ் பகதூர்தான். சிவாஜி ராவ் சினிமாவிற்கு வருவதற்கான பல உந்து சக்திகளில் முக்கியமானதாக ராஜ் பகதூரின் வார்த்தைகளும் இருந்திருக்கிறது. இப்போது சிவாஜி ராவ் ரஜினிகாந்தாக மாறிவிட்டார். ஆனால், நண்பர் ராஜ் பகதூரையும் அவர் சொன்ன வார்த்தைகளையும் இன்றைக்கும் ரஜினிகாந்த் மறக்கவில்லை. கலையுலகின் உயரிய விருதை பெற்ற போது தன் நண்பரையும் சேர்த்து கௌரவப்படுத்தினார். கிட்டத்தட்ட குசேலன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை போன்றுதான். திரையில் மட்டுமில்லை நிஜத்திலும் ரஜினிகாந்த் நட்பை போற்றும் சூப்பர்ஸ்டார்தான். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வாழ்விலும் தாழ்விலும் நட்பு பாராட்டுபவர்கள் அரிதானவர்கள். அப்படியொருவர் நம் வாழ்வில் கடக்கும் போது அவரையும் அந்த நட்பையும் எந்த நாளிலும் மறந்துவிடக்கூடாது. ரஜினிகாந்தை போல!





செய்நன்றி அறிதல்:


ரஜினிகாந்த்தின் திருமணத்தின் போது நடைபெற்ற சம்பவம் இது. ரஜினிகாந்த்- லதா ரஜினிகாந்த் இந்த இணையின் திருமணம் திருப்பதியில் நடந்திருந்தது. அப்போது திருமணத்தை முடித்துவிட்டு மணத்தம்பதியினர் மற்றும் அவர்களது உறவினர்கள் கோவிலை விட்டு வெளியே வந்த போது ரஜினிகாந்தை பலரும் அடையாளம் கண்டு கொண்டுவிட்டனர். ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுக்க கூட்டம் மொய்க்கிறது திடீரென அந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு ரஜினிகாந்த் திபுதிபுவென ஓடுகிறார். உறவினர்கள் யாருக்கும் எதுவும் புரியவில்லை. தூரத்தில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து நலம் விசாரித்து அவரின் காலில் விழுந்து வணங்கிவிட்டு ரஜினி மீண்டும் வந்திருக்கிறார். அந்த நபர் யாரென விசாரித்த போதுதான் அது ரஜினிகாந்த் நடத்துனர் ஆவதற்கு முன் வேலை பார்த்த ஒரு கடையின் முதலாளி என்பது தெரிய வந்திருக்கிறது. எப்போதோ தனக்கு வேலை கொடுத்து வாழ்க்கையை நகர்த்த உதவியாக இருந்த முதலாளியை சூப்பர் ஸ்டார் ஆன பிறகும் ரஜினிகாந்த் மறக்கவில்லை. இந்த நன்றி மறவா குணம் இன்று வரை ரஜினியிடம் தொற்றிக் கொண்டிருப்பதை பார்க்க முடியும். சினிமா குருவான கே.பாலச்சந்தரின் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் இன்றளவும் ரஜினிகாந்த் வைத்திருக்கும் மரியாதை அந்த நன்றியுணர்வின் வெளிப்பாடே. கே. பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் மட்டுமில்லை. கவிதாலயா சார்பில் அவர் படம் தயாரித்த போதும் எப்போது ரஜினியை அணுகினாலும் எந்த மறுப்புமின்றி குருவிற்காக செய்து கொடுத்தார். பாலச்சந்தர் அவர்களின் மறைவிற்கு பிறகும் கூட அவர் மீது வைத்திருந்த அதே மரியாதையை அவர் குடும்பத்தின் மீதும் வைத்திருந்தார். மேன் Vs வைல்ட் என்ற சர்வைவல் நிகழ்ச்சியில் ரஜினியை பங்கெடுக்க வைக்க வேண்டும் என தொலைக்காட்சி தரப்பு விரும்பிய போது அவர்கள் பாலச்சந்தர் அவர்களின் குடும்பத்தையே அணுகியிருக்கிறார்கள். அவர்கள்தான் ரஜினிகாந்திடம் இந்த நிகழ்ச்சி குறித்து எடுத்துக்கூறி ஒப்புதல் வாங்கியிருக்கிறார்கள். பாலச்சந்தர் அவர்களின் வாரிசுகளுக்கு பதிலாக தொலைக்காட்சி நிறுவனம் வேறு யாரையோ அல்லது அவர்களே நேரடியாகவோ முயன்றிருந்தாலோ ரஜினிகாந்த் ஒத்துக்கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே. தனது குருவிற்கு பிறகும் காலம் கடந்தும் அதே நன்றியுணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.


பிறரை பாராட்டும் பேருள்ளம்:


சமீபத்தில் மாநாடு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்ந்திடம் இருந்து படக்குழுவை சேர்ந்த அத்தனை பேருக்கும் தொலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது. படத்தை பார்த்து வியந்துபோன ரஜினிகாந்த் படக்குழுவை  பாராட்டி தள்ளியிருக்கிறார். மாநாடு என்றில்லை தன் மனம் கவர்ந்த திரைப்படம் என்றால் யாரை பாராட்டவும் ரஜினிகாந்த் தயங்கியதில்லை. அது தனக்கு நிகரான நடிகராக இருந்தாலும் சரி தனக்கு அடுத்தக்கட்டத்தில் இருக்கும் நடிகர் என்றாலும் சரி. பாபா படம் தோல்வியடைந்த பிறகு அடுத்த படத்தை ஒப்புக்கொள்வதற்கு முன் ஒரு நிகழ்ச்சியில் விஜய், சூர்யா, விக்ரம் போன்றவர்களை ரஜினிகாந்த் பாராட்டி பேசியதையும், கமல் 50 நிகழ்ச்சியில் உள்ளம் திறந்து தனது திரையுலக அண்ணாவான கமலை பாராட்டியதையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம். அடுத்தவர்களை முழுமையாக மனம் திறந்து பாராட்டும் போது தன்னை பற்றிய தன் இடத்தை பற்றிய ஒரு Insecurity அவருக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. உங்களுக்கே உங்களுக்கென ஒரு இடம் எப்போதும் உண்டு. யார் எவ்வளவு சிறப்பாக செய்தாலும் உங்கள் இடத்தை அந்த நபரால் நிரப்பிவிட முடியாது என்கிற புரிதல் ரஜினிக்கு அதிகம் இருந்தது. அந்த புரிதல்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கிய பாடம். அதை கற்றுக்கொண்டால் எந்த மனத்தடங்கலும் இன்று உள்ளன்போடு சகமனிதர்களை பாரட்டிவிடலாம்.




எளிமை:


கலைப்புலி எஸ்.தாணு, சினிமாத்துறையில் பிரம்மாண்டமான தயாரிப்பாளராக அறியப்பட்டவர். நீண்ட காலத்திற்கு பிறகு அவருக்கு ரஜினிகாந்த்தின் கால்ஷீட் கிடைக்கிறது. கபாலி என்ற படத்தை அறிவிக்கிறார். ரஜினி ஒரு பிரம்மாண்டம். தாணு ஒரு பிரம்மாண்டம். கூடவே இளம் இயக்குனர் ரஞ்சித்தும் சேரவே படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உருவாகியிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்த போது அங்கே தங்குவதற்கு உயர்தரமான வசதியை ஏற்படுத்திக் கொடுத்து ரஜினிகாந்த்தை கவர்ந்துவிட வேண்டும் என தாணு விரும்புகிறார். இருப்பதிலேயே பிரம்மாண்டமான ஒரு ஹோட்டலை தேர்ந்தெடுத்து அதில் பிரம்மாண்டமான அறையை புக் செய்ய வேண்டும் என தயாரிப்பு தரப்பு சல்லடை போட்டு தேடுகிறது. 1996 இல் மைக்கேல் ஜாக்சன் மலேசியா வந்த போது அவர் தங்கிய ஹோட்டல் அறையை ஒரு ஹோட்டல் அப்படியே நினைவு அர்த்தமாக பராமரித்து வருவதாகவும், அதை அதன்பிறகு வேறு யார் தங்குவதற்கும் கொடுக்கவில்லை என தகவல் கிடைக்கிறது. விலைமதிப்பற்ற வசதிகளோடு ஒரு அரண்மனையை போல காட்சியளிக்கும் அந்த அறையை வேண்டி தயாரிப்பு தரப்பு அந்த ஹோட்டலை அணுகவே, முதலில் அறவே மறுத்த அந்த ஹோட்டல் தரப்பு ரஜினிகாந்திற்காக கேட்கிறார்கள் என்றவுடன் உடனே ஒப்புக்கொண்டது. தாணு பெரும் மகிழ்ச்சியடைகிறார். ரஜினியும் சந்தோஷப்படுவார் என அவருக்கு இந்த தகவல் கடத்தப்பட்டது. உடனே, தயாரிப்பு தரப்பிற்கு ரஜினியிடமிருந்து அழைப்பு வருகிறது. ரஜினிகாந்த் நம்மை பாராட்டி உச்சிமுகர போகிறார் என நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இத்தனை பெரிய பிரம்மாண்ட அறை எனக்கு எதற்கு? நான் அங்கெல்லாம் தங்கமாட்டேன். அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு அறை இருந்தால் போதும் என ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். உடனே, ஒரு நாளைக்கு 6 லட்ச ரூபாய் வாடகையில் ஒரு அறை பார்க்கப்பட்டிருக்கிறது. அதிலும் ரஜினிக்கு விருப்பமில்லை. கடைசியாக ஒரு நாளைக்கு 80000 வாடகை கொண்ட ஒரு அறையிலேயே ரஜினி தங்கியிருக்கிறார். 6 லட்ச ரூபாய் அறைக்கு பதில் 80000 ரூபாய் அறையில் தங்குவதெல்லாம் எளிமையா? உண்ண உணவும் குடிசையுமின்றி எத்தனையோ கோடி பேர் இந்தியாவில் இருக்கிறார்களே என கேள்வி கேட்டால் இந்த கேள்வியை கூட ரஜினிகாந்த் ஆமோதித்துவிடுவார். அவருக்கு தான் எளிமையாக இருக்கிறோம் என கூறப்படும் பாராட்டுகளிலெல்லாம் பெரிய உடன்பாடு கிடையாது. ஆனால், அறிமுக படம் வெளியாவதற்கு முன்பே சூப்பர்ஸ்டார் போல பில்டப் கொடுக்கும் நடிகர்களுக்கு மத்தியில், 45 வருடமாக உச்சாணிக் கொம்பில் இருக்கும் சூப்பர்ஸ்டார் அரண்மனையை தவிர்த்துவிட்டு 80000 ரூபாய் அறையை டிக் அடிப்பது எளிமையின்றி வேறென்ன?


முன் வைத்த காலை பின் வைக்கலாம்!


இங்கே வெற்றி அளவுக்கு அதிகமாக புனிதப்படுத்தப்பட்டிருக்கிறது. வெற்றியாளர்களுக்கு மட்டுமே வரலாற்றில் இடம் கொடுக்கப்படுகிறது. ஆனால், எல்லாராலும் எடுத்துக் கொண்ட காரியத்திலோ லட்சியத்திலோ வெற்றியடைந்துவிட முடியாது. வென்றவர்களை விட இங்கே தோற்றவர்கள்தான் அதிகம். சினிமாவை பொறுத்தவரைக்கும் ரஜினி ஒரு வெற்றியாளர்..சாதனையாளர். ஆனால், அரசியலில்? அவர் தோற்றுப்போனவர். சொல்லப்போனால் அரசியல் கட்சியே ஆரம்பிக்காமல் முழுநேர அரசியலுக்கு வருவதற்கு முன்பே அரசியலில் தோற்றுப்போனவர். 'வெறும் ஏணியாய் இருந்து ஏமாற்றமாட்டேன்...முன் வைத்த காலை நான் பின் வைக்கமாட்டேன்' என பாடியவர் 'இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல' என முழங்கியவர் ஒரு கட்டத்தில் தானே முன் வந்து தனது அரசியல் அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ரஜினிகாந்த்தை ஒரு சூப்பர் ஹியுமனாகத்தான் நாம் இத்தனை ஆண்டு காலம் பார்த்திருக்கிறோம். அவரால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்ற பிம்பமே அவர் மீது இருந்தது. கிட்டத்தட்ட கடவுளுக்கு ஒப்பாகத்தான் ரஜினியை அவர் ரசிகர்கள் பார்க்கிறார்கள். இதெல்லாம் ரஜினிக்கும் தெரியும். பொது மக்கள் மற்றும் ரசிகர்களின் இந்த பிம்ப கட்டமைப்புதான் தனக்கான மார்க்கெட் என்றும் அவருக்கு தெரியும். ஆனாலும், தோற்றுப்போவதற்கும் பின் வாங்குவதற்கும் தயாராக இருந்தார். ரஜினி தனது வாழ்நாளில் எடுத்த மிக முக்கிய முடிவுகளில் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது முதன்மையானதாக இருக்கும். வறட்டு கௌரவத்தோடு தனது இமேஜை தலையில் ஏற்றிக் கொண்டு, அறிவித்துவிட்டோம் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதற்காக ரஜினி அரைகுறையாக அரசியலில் இறங்கியிருந்தால் அவரின் உடல்நிலை என்னவாயிருக்கும்? தமிழக அரசியல் சூழல் என்னவாயிருக்கும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையை நிதானமாக யோசித்து பார்த்தால் ரஜினிகாந்த் அரசியலிலிருந்து பின் வாங்கியதன் வீரியத்தை புரிந்துக் கொள்ள முடியும். எப்போதுமே நாம் நினைத்ததே நடக்க வேண்டும் என நினைப்பதும், வெற்றியை மட்டுமே பெற வேண்டும் என நினைப்பதும் அபத்தமே. தோற்றுப் போகலாம். தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள். முன் வைத்த காலை சூழல் கருதி பின் வைக்கலாம் தவறில்லை! அதற்கும் ரஜினிகாந்த் தான் சிறந்த உதாரணம்.


ஒரு மனிதனின் வெற்றிகளும் சாதனைகளும் மட்டுமில்லை தோல்விகளும் சறுக்கல்களும் கூட முக்கியமான செய்திகளையும் வாழ்க்கை பாடங்களையும் கடத்திக் கொண்டுதான் இருக்கின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வாழ்வும் அப்படியானதே! 


Happy Birthday SuperStar!!