ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. முன்னால் காவல் அதிகாரியின் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் ரஜினி தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போலீஸாக ரஜினி நடிக்கும் ஏழாவது படம் ஜெயிலர்.இதற்கு முன்பாக ரஜினி போலீஸாக நடித்த ஆறு கதாபாத்திரங்கள் என்ன தெரியுமா?
அன்புக்கு நான் அடிமை
ரஜினி முதல் முதலாக காவல் அதிகாரியாக நடித்தப் படம் அன்புக்கு நான் அடிமை. 1980 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ஆர். தியாகராஜன் இயக்கினார். திருடனாக இருக்கும் ரஜினி வேறு ஒரு ஆளாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டு போலீஸாக மாறுவார். தனது வேலைக்கு நியாயமாக இருக்க முடிவு செய்து வில்லன்களை தோற்கடிப்பதே இப்படத்தின் கதையாகும்.
மூன்று முகம்
அலெக்ஸ் பாண்டியன் என்றால் ஒரு காலத்தில் சின்ன குழந்தைகூட ரஜினி என்கிற பெயரை சொல்லும் அளவிற்கு புகழ்பெற்றது மூன்று முகம் திரைப்படம். முதல் முறையாக மூன்று கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களை தனது பட்டாஸான நடிப்பால் அசரவைத்தார் ரஜினி. இன்றுவரை போலீஸாக அவர் நடித்த சிறந்த படம் என்று ரசிகர்கள் சொல்வது மூன்று முகம் படத்தைதான். “தீப்பெட்டிக்கு இரண்டு பக்கம் உரசுனா தான் தீப்பிடிக்கும்.. ஆனால் இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்த பக்கம் உரசுனாலும் தீப்பிடிக்கும்” என ரஜினியின் டயலாக் மாஸாக இருக்கும்.
கொடி பறக்குது
இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்திற்குப் பின் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவருடைய இயக்கத்தில் ரஜினி நடித்தப் படம்தான் கொடி பறக்குது. கடலோர கவிதைகள், வேதம் புதிது உள்ளிட்டப் படங்களை இயக்கிய பாரதிராஜா தனது இயக்குநர் பயணத்தில் உச்சத்தில் இருந்தார். இந்த சமயத்தில் தான் ரஜினியுடன் தனது அடுத்தப் படத்தை இயக்கிநார். கலவையான விமர்சனகளை இந்தப் படம் பெற்றது.
நாட்டுக்கு ஒரு நல்லவன்
பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா, குஷ்பு உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வி. ரவிச்சந்திரன் இயக்கிய படம் நாட்டுக்கு ஒரு நல்லவன். ஒரே சமயத்தில் தமிழ் , தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியானது.
பாண்டியன்
கமல்ஹாசனின் தேவர் மகன் படம் ஒரு பக்கம் வெளியாகி இருக்கும் மறுபக்கம் வெளியானத் திரைப்படம் ரஜினியின் பாண்டியன். ஐ.பி.எஸ் அதிகாரியாக இந்தப் படத்தில் ரஜினி நடித்திருந்தார். ரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.பி முத்துராமன் இந்தப் படத்தை இயக்கினார்.
தர்பார்
தர்பார் படம் வெளியாகும் வரை ரஜினியை கிட்டதட்ட 17 ஆண்டுகள் யாரும் போலீஸ் கதாபாத்திரத்தில் பார்க்கவில்லை. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் தர்பார். வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது
ஜெயிலர்
சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷராஃப், விநாயகன், யோகிபாபு, ஷிவ ராஜ்குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.