'பொன்னியின் செல்வன்’ படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்த ஜெயம்ரவியை ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார். 


 







இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஜெயம் ரவி, “ அந்த ஒரு நிமிட உரையாடல் இந்த நாள், இந்த ஆண்டு மற்றும் எனது சினிமாவின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை சேர்த்து இருக்கிறது. உங்களது கனிவான வார்த்தைகளுக்கும் குழந்தை போன்ற உற்சாகத்திற்கும் நன்றி தலைவா..! உங்களுக்கு படமும் என்னுடைய நடிப்பும் பிடித்து இருக்கிறது என்பதை அறிந்த நான் மிகவும் பணிவாக மகிழ்ச்சி அடைந்தேன். நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார். 


ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுக்க 5,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கல்கியின் ஆகச்சிறந்த படைப்பான ‘ பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப்படம் நாவலை படித்தவர்கள் மத்தியிலும் சரி, படிக்காதவர்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே அண்மையில் இந்தப்படத்தின் வசூல் தொடர்பான விவரங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், முதல் நாளில் உலகம் முழுவதும் 80 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


படத்தின் 2 ஆவது நாள் வசூல் தொடர்பான விவரங்கள் நேற்று வெளியாகியது. அந்தத்தகவல்களின் படி, பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டாவது நாளில் 150 கோடியை தாண்டி வசூலித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து மூன்றாவது நாள் கலெக்‌ஷனும் வெளியானது. அதில் உலகளவில் சுமார் 202.87 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 


 




முன்னதாக, கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவியமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை  பெரிதாக கவரவில்லை. 


அதனைத்தொடர்ந்து  'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது.  இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்வில் படத்தில் நடித்த கலைஞர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர தமிழ் பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதனைத்தொடந்து பல்வேறு இடங்களுக்கு சென்று பிரோமோஷன் தொடர்பான பணிகளும் பரபரப்பாக நடந்தது குறிப்பிடத்தக்கது.